வால்பாறை தேயிலை தோட்டம். 
சுற்றுலா

வால்பாறை | ஏக்கம் தரும் ஏழாவது சொர்க்கம்

எஸ்.கோபு

வால்பாறை: பரந்து விரிந்த புல்வெளி, அடர்ந்த வனத்துக்குள் வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை, அதன் இடையிடையே குறுக்கிடும் நீரோடைகள், அமைதியான வனத்துக்குள் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள், தலையை உரசி செல்லும் மேகங்கள், உடலில் ஊடுருவும் குளிர், மூலிகை நறுமணம் வீசும் காற்று என இயற்கையின் அனைத்து படைப்புகளையும் ஒரு சேர கண்டு ரசிக்கக்கூடிய இடமாக இருப்பதால், பூமியின் ஏழாவது சொர்க்கம் என வால்பாறை அழைக்கப்படுகிறது. அதனால்தான், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமவெளிப் பகுதியான ஆழியாறில் உள்ள பூங்கா, அணையில் படகு சவாரி, கவியருவி ஆகிய சுற்றுலாத் தலங்களோடு தொடங்குகிறது வால்பாறைக்கான சுற்றுலா. வால்பாறை மலைப்பாதையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 9-வது கொண்டை ஊசி வளைவில் நின்று பார்த்தால், இரண்டு மலைகளை இணைத்து கட்டியதுபோல ஆழியாறு அணை நீர்த்தேக்கமும், ஆற்றின் இருபுறங்களிலும் அணிவகுத்து நிற்கும் தென்னை மரங்களும் கண்ணுக்கு பசுமையாக காட்சியளிக்கும். அட்டகட்டி பகுதியை தாண்டினால், கவரக்கல் எஸ்டேட் பகுதியில் நிலவும் பனிமூட்டத்தில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தே செல்ல வேண்டும்.

வால்பாறையில் செயல்படாத படகு இல்லம்.

பச்சை கம்பளம் விரித்ததைபோல காட்சியளிக்கும் தேயிலைத் தோட்டங்கள், வால்பாறைக்குள் நுழைவதை தெரிவித்துவிடும். வால்பாறைக்கு வருபவர்கள், முதலில் செல்வது கருமலை எஸ்டேட் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள பாலாஜி கோயில்.

தென்மலை திருப்பதியில் இருப்பதைபோலவே வெங்கடேச பெருமாள் இங்கு காட்சியளிக்கிறார். மேற்குத்தொடர்ச்சி மலையின் தண்ணீர் தொட்டி என அழைக்கப்படும் அக்காமலை புல்மேடு, வால்பாறை நகரில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் ஒரே மலைப்பகுதி. அடர்ந்த புல்வெளிகள் கொண்ட அப்பகுதி, வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நீராறு அணையில் தொடங்கி 4 கி.மீ. சுரங்கத்துக்குள் பாய்ந்து வரும் தண்ணீர், ஆர்ப்பரித்து வெளிவரும் இடம் வெள்ளமலை நீர் சுரங்கம். தண்ணீரின் ஆற்றலையும், அழகையும் காண இங்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் செல்கின்றனர். வால்பாறையில் அதிகமழை பெய்யும் சின்னகல்லாறு வனப்பகுதிக்குள் அமைந்துள்ள மரப்பாலத்தின் வழியாக, அடர்ந்த காட்டுக்குள் அருவியை காண செல்லும் நடைபயணம், சுற்றுலா பயணிகளுக்கு ‘த்ரில்’ கலந்த அனுபவத்தை அளிக்கும். தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் ஓடி வரும் கூழாங்கல் ஆற்றின் சில்லிடும் ஆற்றுநீர், சுற்றுலா பயணிகளை மீண்டும், மீண்டும் அங்கு வரவழைக்கிறது.

தேயிலை தோட்டங்களுக்குள் உலா வரும் யானைகள் கூட்டம்.

இதேபோல, வால்பாறை பகுதியில் பல்வேறு பள்ளத்தாக்குகள் அமைந்திருந்தாலும், நல்லமுடி காட்சிமுனை பகுதியில் இருந்து காணப்படும் பள்ளத்தாக்கில் இருந்து பார்த்தால் கேரளா மாநில வனப் பகுதியில் அமைந்துள்ள பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் தெரியும்.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கல் அணையான சோலையாறு அணை, தேயிலை காடுகளுக்கு உள்ளே நகரும் குன்றுகளாக காட்சி தரும் யானைகள் என இயற்கையின் மத்தியில் அமைந்துள்ள இப்பகுதிகளைக் காண்பதற்காகவும், இங்கு நிலவும் காலநிலை மாற்றத்தை அனுபவிப்பதற்காகவும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

வால்பாறையின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உருவாக்கப்பட்டன. தேயிலை தோட்ட தொழிலுக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது சுற்றுலா தொழில். நகரில் வாகன நெரிசலை தவிர்க்க வாகன நிறுத்துமிடங்கள், கோவையிலிருந்து ஒருநாள் சுற்றுலா வேன் திட்டம், படகு இல்லத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே இங்கு வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலா வருபவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

SCROLL FOR NEXT