கொடைக்கானல்: தொடர் மழை காரணமாக கொடைக் கானலில் சுற்றுலா பயணிகள் இன்றி சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகள், காட்டாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் இன்றி சுற்றுலா இடங்கள் நேற்று வெறிச்சோடின. பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, தூண் பாறை, குணா குகை, வெள்ளி நீர் வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
படகுகள் நிறைந்து காணப்படும் கொடைக்கானல் ஏரியில் ஒரு சில படகுகளிலேயே சுற்றுலா பயணிகள் வலம் வந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் சாலையோர வியாபாரிகள் பிற்பகலுக்கு பிறகு கடைகளை அடைத்து விட்டு சென்றனர். அடுத்து வரும் சனி, ஞாயிறு வார விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, விஜய தசமி என 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.