பொள்ளாச்சி: வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. வால்பாறைக்கு வரும் வழியில் ஆழியாறு அணை, கவியருவி ஆகியவையும், வால்பாறையில் சின்னகல்லாறு நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை ஆகிய முக்கிய சுற்றுலா தலங்களை மட்டுமே காண வேண்டியுள்ளது. சுற்றுலாவை மேம்படுத்த நகராட்சி சார்பில் வால்பாறையில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உருவாக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் பல வண்ணங்களில் ஒரு சேர காற்றில் மிதந்து வருவதுபோல, கூட்டமாக பறந்து வருவதை காண்பவர்கள் உள்ளமும் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும். அதனால்தான் பட்டாம்பூச்சியை பாடாத கவிஞர்களே இல்லை. அந்த வகையில் ஆழியாறு வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவில் இருப்பதால், ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி அருகே வனத்துறை சார்பில் வண்ணத்துப்பூச்சி பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவுக்கு ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் காமன்காக்கை உள்ளிட்ட ஐந்து வகையான வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வண்ணத்துப்பூச்சிகளை கவர சூரியகாந்தி, காட்டாமணக்கு உள்ளிட்ட 30 வகையான செடிகள் நடப்பட்டுள்ளன. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கவும், எலுமிச்சை, கருவேப்பிலை செடிகள் நடப்பட்டுள்ளன.
இந்த வண்ணத்துப்பூச்சிகளுக்கு ஏற்ற தட்ப, வெப்ப நிலையை பராமரிக்க பூங்காவுக்குள் செயற்கை நீரூற்று, பல்வேறு செடிகள், மரங்கள், புற்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பல்லுயிர்கள், வரைபடம், பழங்குடியினரின் வாழ்க்கை முறை, புகைப்படம் மற்றும் தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பாம்பு, இருவாச்சி பறவை, தமிழ் மறவன் வண்ணத்துப்பூச்சி, சிலந்தி ஆகியவற்றின் சிலைகளையும் வைத்துள்ளனர்.
பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்திலிருந்து ஆழியாறு அணையை ரசித்து பார்க்கலாம். இங்கு குழந்தைகளை கவரும் வகையில் செயற்கை அருவி அமைக்கப்பட்டுள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.