சுற்றுலா

புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் வாகன நிறுத்தும் இடங்களை அறிய புதிய செயலி

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து ( கிழக்கு - வடக்கு ) எஸ்பி மாறன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்கு வரத்தை சரி செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இது தொடர்பாக உள்துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். பழைய துறைமுகத்தில் 1,000 கார்களுக்கு மேல் நிறுத்தலாம்.

மின் வசதி, சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வார இறுதி நாட்களில் அங்கு வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக க்யூஆர் கோடு வசதியுடன் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள், வழி தெரியாமல் சிரமப்படும் நிலையில், இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளோம்.

இந்த க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்தால் வாகன நிறுத்துமிடத்துக்கு செல்ல முடியும். எஸ்.வி.பட்டேல் சாலையில் இருந்து செயின்ட் லூயிஸ், துமாஸ் வீதி, பிரான்சுவா மார்ட்டின் சாலைகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. சுய் ப்ரேன் வீதி, ரோமன் ரோலண்ட் வீதி ஒரு பக்கம் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

புஸ்ஸி வீதியில் வாகனங்கள் அதிகளவில் வருவதால் நான்கு சக்கர வாகனம் உள்ளிட்டவை மாலை 5 மணிக்கு மேல் செல்ல ஒரு வழி பாதையாக வெள்ளோட்டம் பார்க்க உள்ளோம். செஞ்சி சாலை, ஆம்பூர் சாலையில் ஒரு பக்கம் மட்டுமே வாகனங்கள் நிறுத்த அனுமதி உண்டு. இதற்கான அறிவிப்பு பலகைகள் வைக்கவும் உள்ளோம் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT