சுற்றுலா

பருவமழைக் காலத்தில் கோடையை மிஞ்சும் வெயில்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: பருவமழைக் காலத்தில் தரைப் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின்னரும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் இருக்கும். ஆனால், தற்போது மழைக்காலமாக உள்ள போதிலும், தரைப் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்தும்கூட, கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வன உயிரின வார விழாவையொட்டி நேற்று கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல கட்டணம் ரத்து செய்யப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

கொடைக்கானலில் நேற்று காலை மிதமான வெப்பம் நிலவியது. மேலும், பல பகுதிகளில் பனிமூட்டம் காணப்பட்டது. மாலையில் லேசான சாரல் மழையுடன், இதமான காலநிலை நிலவியது. சுற்றுலாத் தலங்களில்குவிந்த ஏராளமான மக்கள்,இயற்கை எழிலைக் கண்டுகளித்ததுடன், ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தரைப் பகுதியில் அதிகபட்சமாக நேற்று 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. அதேநேரம், கொடைக்கானல் மலைப் பகுதியில் அதிகபட்சமாக பகலில் 20 டிகிரி செல்சியஸும், இரவில் 13 டிகிரி செல்சியஸும் வெப்பம் நிலவியது. தரைப் பகுதியில் அதிக வெப்பத்தை சமாளிக்க முடியாமல் விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, பிற நாட்களிலும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

SCROLL FOR NEXT