திண்டுக்கல்: வன உயிரின வார விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அக்டோபர் 8-ம் தேதி வனத்துறை சுற்றுலா இடங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என வனத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் அக்.2 முதல் அக்.8-ம் தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி, கொடைக்கானலில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வன விலங்குகளை பாதுகாப்பது குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (அக்.8) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், குணா குகை, தூண் பாறை, பைன் மரக்காடு, மன்னவனூர் சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் தேனி மாவட்டம் கும்பக்கரை அருவி உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என வனத்துறை அறிவித்துள்ளது.