சின்னமனூர்: மேகமலை வனச்சாலையின் கொண்டை ஊசி வளைவுகளுக்கு இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு பூக்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இது வாகன ஓட்டுநர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூருக்கு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மேகமலை. இங்கு செல்வதற்கான மலைப் பாதையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. வழிநெடுக தேயிலை தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன.
இங்கு ஹைவேவிஸ், மணலாறு, மேகமலை, மகாராஜ மெட்டு, மேல்மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. யானை, மான், காட்டுமாடு, காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு மற்றும் தோட்டப் பகுதிகளுக்கு வந்து செல்வது உண்டு.
இதனால் மாலை 6 மணிக்கு மேல் இந்த சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரவிக்கிடக்கும் தேயிலை தோட்டங்களும், பசுமையான பள்ளத்தாக்கும் பார்ப்பவர் மனதை குளிரச் செய்கிறது. குறிப்பாக இங்குள்ள சில்லென்ற பருவநிலையும், தலைக்கு மேல் மெதுவாக கடந்து செல்லும் வெண்மேகங்களையும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். இதனால் நடுத்தர மக்களின் மலைவாசஸ்தலமாக மேகமலை இருந்து வருகிறது.
தென்பழநி எனும் அடிவாரத்தில் இருந்து ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளையும் ரசித்துக் கொண்டே பயணிக்கலாம். மேலும் இந்த வளைவுகளுக்கு இலக்கியத்தில் குறிப்பிடப் பட்டுள்ள பல்வேறு பூக்களின் பெயர்களை சூட்டி அழகுபடுத்தியுள்ளனர். கொன்றை, இருவாட்சி, அனிச்சம், காந்தள், வாகை, தும்பை, வஞ்சி, வெட்சி, மருதம், குறிஞ்சி என்று ஒவ்வொரு பூக்களும் வளைவுகளில் சுற்றுலா பயணிகளை வரவேற்று வழி அனுப்புகின்றன.
வளைவுகளை எண்ணிக் கையில் மட்டுமல்லாது மலர் மீது கொண்ட நேசத்தின் அடிப்படையில் பெயர்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், கம்பம்மெட்டு மலைச்சாலை வளைவுகளிலும் இதுபோன்று பூக்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. எண்ணிக்கையாக இல்லாமல் பூக்களின் பெயரில் கொண்டை ஊசி வளைவுகள் அழைக்கப்படுவது வாகன ஓட்டுநர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் உற்சாகத்தை தருகிறது என்றனர்.