கொடைக்கானலில் பரிசல் சவாரி நிறுத்தப்பட்ட பேரிஜம் ஏரி. 
சுற்றுலா

பெரியகுளம் நகராட்சி கோரிக்கை ஏற்பு: கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் பரிசல் சவாரி நிறுத்தம்

செய்திப்பிரிவு

பெரியகுளம்: கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் பரிசல் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக வனத் துறை அறிவித்துள்ளது. கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியமானது பேரிஜம் ஏரி. இந்த ஏரியைப் பார்வையிடுவதற்காக ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இந்த ஏரியில் பரிசல் சவாரி தொடங்கப்படும் என சுற்றுலாத் துறையும் வனத்துறையும் இணைந்து அறிவித்திருந்தன. இதன்படி கடந்த வாரம் பரிசல் சவாரி தொடங்கப்பட்டது.

இதற்கிடையே, பேரிஜம் ஏரியிலிருந்து பெரியகுளம் நகருக்கு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவே பெரியகுளம் நகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பேரூராட்சி, ஊராட்சிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. பேரிஜம் ஏரியில் பரிசல் சவாரி தொடங்கியதால் ஏரியின் நீர் மாசுபடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக புகார்கள் எழுந்தன.

இது குறித்து பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் வனத்துறை மற்றும் சுற்றுலாத் துறைக்கு புகார் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தொடங்கிய ஒரே வாரத்தில் பரிசல் சவாரியை நிறுத்துவதாக வனத் துறையினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு பெரியகுளம் பகுதி மக்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெரியகுளம் நகராட்சி ஆணையர் கணேசன் கூறுகையில், பரிசல் சவாரியால் ஏரி மாசடைய வாய்ப்புள்ளது என்று கூறி அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பரிசல் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. நகராட்சிப் பணியாளர்கள் மூலம் ஏரியைக் கண்காணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT