கொடைக்கானல்: கொடைக்கானல் பங்க்குகளில் பெட்ரோல், டீசலுக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் சிரமப்பட்டனர்.
கொடைக்கானலில் செப்.30 முதல் அக்.2-ம் தேதி வரை 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறையால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை, உள்ளூர் மக்களின் தேவை காரணமாக இங்குள்ள 3 பங்க்-குகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பலர் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் கொடைக்கானலிலேயே தங்கினர். கடந்த 3 நாட்களாக போக்குவரத்து நெரிசலால் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில் நேற்று பங்க்குகளில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடையச் செய்தது.
பங்க்குகளில் கயிறு கட்டியும், பெட்ரோல், டீசல் இல்லை என்று அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டிருந்தது. மாலையில் ஒரு பங்க்-கில் பெட்ரோலும், ஒரு பங்க்-கில் டீசலும் வழங்கப்பட்டது. அதுவும் போலீஸ், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர மற்றும் அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் உள்ளூர் மக்களின் அத்தியாவசியப் பணிகளும் பாதிக்கப்பட்டன.
இது குறித்து பங்க் உரிமையாளர்கள் கூறுகையில், அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகையால் வழக்கத்தைவிட கூடுதலாக பெட்ரோல், டீசல் விற்பனையானது. மேலும் எண்ணெய் நிறுவனங்களில் குறிப்பிட்ட நேரத்தில் பெட்ரோல், டீசல் அனுப்பாததே தடுப்பாட்டுக்குக் காரணம். எரிபொருள் வந்ததும் நிலைமை சரியாகி விடும், என்றனர்.