நாமக்கல் நகருக்கு அடையாளமாகத் திகழும் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த மலைக்கோட்டை. 
சுற்றுலா

நாமக்கல் மலைக்கோட்டையில் மதநல்லிணக்க அடையாளமாக அலங்கார விளக்கு அமைக்க வலுக்கும் கோரிக்கை

கி.பார்த்திபன்

நாமக்கல்: மதநல்லிணக்கத்துக்கு அடையாளமாகத் திகழும் நாமக்கல் மலைக்கோட்டை இரவு நேரத்தில் ஜொலிக்கும் வகையில் அலங்கார விளக்குகள் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் 246 அடி உயரத்தில் மலைக்கோட்டை உள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் மலைக்கோட்டை உள்ளது. இந்த மலை உருவானது தொடர்பாக புராண வரலாறு உள்ளது. விஷ்ணுவுக்கு உகந்த தெய்வீக கல் என, அறியப்படும் சாளக்கிராமத்தை இவ்வழியாக அனுமன் எடுத்துச் சென்றபோது, நாமக்கல் கமலாய குளத்தில் நீராட சாளக்கிராமத்தைக் கீழே வைத்துவிட்டு அனுமன் நீராடச் சென்றுள்ளார்.

நீராடிய பின்னர் சாளக்கிராமத்தை அனுமன் எடுக்க முயன்றபோது, எடுக்க முடியவில்லை. இதனால், இங்கே வைத்து விட்டு, அவரும் தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் கோட்டையில் நரசிம்மர் சந்நதி, ரங்கநாதர் சந்நதிக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இம்மலையை நாமகிரி என அழைக்கின்றனர். இதனால், இவ்வூருக்கு நாமக்கல் எனப் பெயர் ஏற்பட்டதாகவும் அறிய முடிகிறது.

மலைக்கோட்டையின் மீது பெருமாள் கோயில் மற்றும் முஸ்லிம் மக்கள் வழிபாடு நடத்தும் தர்காவும் உள்ளது. நூற்றாண்டு கடந்து நிற்கும் கோயில் மற்றும் தர்காவில் இன்றளவும் வழிபாடுகள் நடந்து வருவது, மதநல்லிணக்கத்துக்கு அடையாளமாக அமைந்திருப்பது சிறப்பு. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மலைக்கோட்டைக்குச் செல்ல தவறுவதில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மலைக்கோட்டையைச் சுற்றி மின் ஒளி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலை தொடங்கி இரவில் குறிப்பிட்ட நேரம் வரை ஒளி அலங்காரத்தில் மலைக்கோட்டை ஜொலிக்கும்.

இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக மின் அலங்காரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என நகர மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக சுற்றுலா கலாச்சார ஆர்வலர் ஆர்.பிரணவக்குமார் கூறியதாவது: நாமக்கல் மலையைச் சுற்றி குளங்கள் உள்ளன. இவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அழகுபடுத் தப்பட்டது. மலையின் ஒருபுறம் உள்ள குளத்தில் மாலை நேரத்தில் மலையின் முழு நிழலும் விழுவது காண்போரை ரசிக்கச் வைக்கும்.

இம்மலை மீது 16-ம் நூற்றாண்டின்போது கட்டப்பட்ட கோட்டை அதன் பொலிவு குன்றாமல் இன்றளவும் கம்பீரமாக காட்சியளித்து வருகிறது. 16-ம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பாளையக்காரரான ராமச்சந்திர நாயக்கரால், இக்கோட்டை கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. அதேவேளையில் கோட்டையை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா கட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திப்பு சுல்தான் காலத்தில், கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட இக்கோட்டையை பயன்படுத்தியதாகவும், வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்குச் சான்றாக கோட்டையின் ஒரு பகுதியில் ஆயுதக் கிடங்கும், பாதுகாப்பு சுவர்களும் உள்ளன.

மலைக்கோட்டை அழகை ரசிக்க தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலித்து கோட்டையைப் பார்வையிட அனுமதித்தால் கணிசமான வருவாய் கிடைக்கும். தவிர, மலையைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து ஒரு வழிப்பாதையில் மலைக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையின் மீது பயணிகள் அமரும் வகையில் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்.

மேலும், கோட்டை வரலாறு குறித்த தகவலை வைத்தால் பயணிகள் அறிந்து கொள்ள முடியும். அலங்கார மின் விளக்கு வசதியும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT