அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள். 
சுற்றுலா

கும்பக்கரை அருவியில் பாதுகாப்பான குளியல்: சுற்றுலா பயணிகள் குதூகலம்

என்.கணேஷ்ராஜ்

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் அமைந்துள்ள இப்பகுதி தேவதானப்பட்டி வனச் சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வட்டக்கானல், கொடைக்கானல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் இங்கு அருவியாகக் கொட்டுகிறது. காலை 8 முதல் மாலை 4 மணி வரை அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக பெரியவர்களுக்கு ரூ.30, குழந்தைகளுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக ரூ.20 கட்டணம் செலுத்தி அருவி வரை பேட்டரி காரில் செல்லலாம்.

அருவிப் பகுதியில் நீரில் இழுத்து செல்லப்படுவோரை தடுத்து பாதுகாக்கும்
இரும்பு தடுப்பு வேலி.

மலையில் பெய்யும் மழைநீர்தான் அருவியின் முக்கிய நீராதாரமாக உள்ளது. இவ்வாறு வரும் காட்டாற்று வெள்ளம் பல இடங்களில் குழிகளை ஏற்படுத்தி உள்ளது. குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட அருவிப் பகுதியைக் கடந்து இந்த இடங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சுழலில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் நிலவியது. யானைகஜம், குதிரைகஜம் பகுதிகளில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி இந்தக் குழிகளை மூடும் பணி நீர்வரத்து இல்லாத காலங்களில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது. அதோடு, அருவிப் பகுதியில் தரையில் வழுக்கி தண்ணீரோடு அடித்துச் செல்லப்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்புக்காக இரும்பு தடுப்பு வலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருவியின் மறுபக்கம் குளித்துக் கொண்டிருந்தவர்கள் திடீர் வெள்ளத்தால் அக்கரையில் சிக்கிக் கொண்டனர். அருவியை கடந்து வர முடியாததால் அவர்களை அந்தப்பக்கம் உள்ள கரையில் உள்ள காட்டுவழியே 3 கி.மீ. தூரம் நடந்து வரச் செய்து பின்பு வனத்துறையினர் மீட்டனர். இதுபோன்ற நிலையைத் தவிர்ப்பதற்காக தற்போது அருவியின் குறுக்கே இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் வரும்போது அருவியின் மறுகரையில் சிக்கியவர்கள்
எளிதில் இக்கரைக்கு வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு பாலம்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பாலம், இரும்பு தடுப்பு வேலி அமைத்துள்ளதால் திடீர் வெள்ளம் வந்தாலும் குளிப்பவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் வெள்ளம் வரும்போது குளிப்பவர்களை எச்சரிக்கும் வகையில் சைரன் பொருத்தப்பட்டுள்ளது. 2 ஊழியர்கள் சுற்றுலாப் பயணிகளைக் கண்காணித்து அவர்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். இதனால் அருவிப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினர்.

வெங்கடாசலம்

கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா வந்த சேலம் ராசிபுரத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் கூறுகையில், குற்றாலத்தில் நீண்ட வரிசையில் நின்று பின்பு குளிக்க வேண்டியுள்ளது. மேலும் குறைவான நிமிடமே குளிக்க அனுமதிக்கின்றனர். ஆனால், இங்கு விரும்பும் வரை குளிக்க முடிகிறது. பாதுகாப்பாகவும் உள்ளது என்று கூறினார்.

SCROLL FOR NEXT