கொடைக்கானல் ஏரிச் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்து நின்ற வாகனங்கள். 
சுற்றுலா

போக்குவரத்து நெரிசலால் திணறிய கொடைக்கானல்: நிரந்தர தீர்வு இல்லாததால் தவிக்கும் சுற்றுலா பயணிகள்

செய்திப்பிரிவு

விடுமுறை நாட்களில் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பது தொடர்கிறது. இதற்கு நிரந்தரத் தீர்வுகாண நகராட்சி, சுற்றுலாத் துறை இணைந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

காலாண்டு விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். தினமும் வாகன நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா வந்தோர் இயற்கை எழிலை ரசிக்க முடியாத நிலை நிலவுகிறது.

கொடைக்கானல் நுழைவுப் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி டோல் கேட் தொடங்கி செண்பகனூர் வரை தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சிப் பகுதியில் சாலையோரம் அதிக கடைகளுக்கு அனுமதி கொடுத்தது, வெள்ளிநீர் வீழ்ச்சியைக் காண வாகனங்களை அப்பகுதியில் நிறுத்துவோருக்கு முறையான பார்க்கிங் வசதி செய்து கொடுக்காததுதான் இதற்கு காரணம்.

இதேபோல் ரோஸ் கார்டன் பகுதியில் வாகனங்களை நிறுத்த முறையான பார்க்கிங் வசதி இல்லை. இப்பகுதியில் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால், கலையரங்கம் தொடங்கி அப்சர்வேட்டரி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதேபோல் 12 மைல் சுற்றுச் சாலையில் உள்ள மோயர்பாய்ன்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு ஆகிய சுற்றுலாத் தலங்களிலும் வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டுத்தான் சுற்றுலாப் பயணிகள் இறங்கிச் செல்கின்றனர். இதனால் அடுத்தடுத்து செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பது வாடிக்கையாக உள்ளது.

நகரின் மையப் பகுதியில் உள்ள பிரையன்ட் பூங்கா, ஏரியில் படகு சவாரி செய்யச் செல்வோர் தங்கள் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லை. இதனால் பிரையன்ட் பூங்கா பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாள் முழுவதும் ஏற்படுகிறது.

கொடைக்கானலில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் முறையான வாகன நிறுத்துமிடம் இல்லாததால் சாலையோரங்களிலேயே வாகனங்களை நிறுத்தும் நிலை உள்ளது. இதுவும் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாக அமைகிறது.

மேலும் போக்குவரத்து போலீஸார் போதுமான எண்ணிக்கையில் நியமிக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசலை யார் சரி செய்வது என்ற நிலை உள்ளது. சில நேரங்களில் உள்ளூர் சமூக ஆர்வலர்கள் சிலரே களம் இறங்கி போக்குவரத்தை சரி செய்கின்றனர்.

கொடைக்கானலில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் (மல்டி லெவல் கார் பார்க்கிங்) ஏற்பத்தும் திட்டம் இன்னும் ஏட்டளவிலேயே உள்ளது. இதைச் செயல்படுத்துவதற்கு தீவிர முயற்சியை அரசு எடுக்க வேண்டும்.

தேவையான இடங்களில் முறையாக வாகன நிறுத்தங்களை அமைத்தால் பிரதான சாலைகளில் எளிதாக வாகனங்கள் சென்றுவர வாய்ப்பாக அமையும்.

சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறையினர் அவ்வப்போது ஆக்கிரமிப்பு அகற்றத்தைத் தொடங்குவதும், பின்னர் கைவிடுவதுமாக உள்ளது. இது தொடர்பாக உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்போதுதான் சுற்றுலாப் பயணிகள் மனஉளைச்சல் இன்றி நிம்மதியாக கொடைக்கானலைச் சுற்றிப் பார்க்க முடியும்.

SCROLL FOR NEXT