மதுரை: கூடல் மாநகர், தூங்கா நகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் என்றெல்லாம் போற்றப்படும் ஊர் மதுரை.
இந்நகரின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோயில், அழகர்மலை, தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மகால், திருப்பரங்குன்றம், கீழடி மட்டுமின்றி மேலும் பல இடங்கள் உள்ளன. மேலும் சமணர் சின்னங்கள், மாங்குளம், அரிட்டாபட்டி, திருவாதவூர், கீழவளவு, யானை மலை, வரிச்சியூர், கீழக்குயில்குடி, துவரிமான் போன்ற இடங்கள் மதுரையின் தொன்மையின் அடையாளங்களாக உள்ளன.
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங் களில் இருந்தும் பக்தர்கள் வருகின் றனர். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும். பொது இடங்களில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வாகன நிறுத்தும் இடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வலி யுறுத்துகின்றனர்.
இது குறித்து சுற்றுலா ஒருங்கிணைப்பாளர், டிராவல்ஸ் நிறுவன நிர்வாகி சீனிவாசன் ஜெயச்சந்திரன் கூறியதாவது: மதுரை மாவட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும். மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம், கள்ளழகர் கோயில் பகுதிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
குறிப்பாக மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிலும் இ - கழிப்பறைகள் பயணிகளை முகம் சுழிக்கச் செய்கின்றன. யாசகர் தொல்லையும் அதிகரித்துள்ளது. சர்வதேச விமானங்கள் மதுரைக்கு வந்து செல்ல வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு எளிமையாக சென்றுவர சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதனால், சுற்றுலா வளர்ச்சி பெறுவதோடு அரசுக்கு வருவாயும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.