மேகமலையில் கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கும் தேயிலைத் தோட்டம். 
சுற்றுலா

மேகமலை தேயிலை தோட்டங்களில் போட்டோ ஷூட் எடுக்க தடை

என்.கணேஷ்ராஜ்

சின்னமனூர்: மேகமலை தேயிலைத் தோட்டங்களில் போட்டோ ஷூட் எடுக்க தடை விதித்து எஸ்டேட் நிர்வாகங்கள் அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளன. தேனி மாவட்டம் சின்னமனூருக்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மேகமலை. 18 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்த இப்பகுதியில் அதிக அளவில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.

இங்கு ஹைவேவிஸ், மணலாறு, மேகமலை, மகாராஜாமெட்டு, மேல்மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. தொட்டு விடும் தூரத்தில் மிதந்து செல்லும் மேகங்கள், சில்லென்ற பருவநிலை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையான சரிவுகள் போன்றவை சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்கின்றன.

யானை, காட்டு மாடு, காட்டுப் பன்றி போன்ற விலங்குகளின் நடமாட்டம் இருப்பதாலும், புலிகள் சரணாலயப் பகுதி என்பதாலும் இங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி இரவு நேரங்களில் மலைச்சாலை போக்குவரத்துக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இருப்பினும் சில்லென்ற பருவநிலை பலரையும் கவர்வதால் விடுமுறை நாட்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வழிநெடுகிலும் உள்ள தேயிலை தோட்டங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். சிலர் தோட்டங்களுக்குள் சென்றும் வீடியோக்களை பதிவு செய்து கொள்கின்றனர்.

மேலும் நிச்சயிக்கப்பட்ட மணமக்களை அழைத்து வந்து புகைப்படக் கலைஞர்கள் போட்டோ ஷூட் எடுக்கின்றனர். தோட்டங்களின் மையப் பகுதிக்குச் சென்று பல்வேறு வகையான பாவனைகளில் பல மணி நேரம் செலவிட்டு புகைப்படம் எடுக்கின்றனர். இதற்காக பெரிய அளவிலான குடை, பிளாஷ் உபகரணங்கள் போன்றவற்றை கொண்டு வருகின்றனர். சிலர் வித்தியாசம் என்ற பெயரில் பலூன், பந்து உள்ளிட்ட பொருட்களையும் கொண்டு வந்து புகைப்படம் எடுக்கின்றனர்.

போட்டோ ஷூட் முடிவடைநத்தும் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட கழிவுகளை அங்கேயே விட்டுச் செல்வதால் தேயிலை தோட்டங்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

இதையடுத்து தேயிலை தோட்ட நிர்வாகங்கள் இது போன்ற போட்டோ ஷூட்களுக்கு தடை விதித்துள்ளது. வெளியாட்கள் தேயிலைத் தோட்டத்துக்குள் நுழையக் கூடாது என்று வழிநெடுகிலும் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தேயிலைத் தோட்ட நிர்வாகிகள் சிலர் கூறுகையில், தேயிலைத் தோட்டங்கள் பார்க்க அழகாக தெரிந்தாலும் அங்கு அட்டைப்புழுக்கள் அதிக அளவில் இருக்கும். மேலும் யானை போன்ற விலங்குகளின் நடமாட்டமும் உள்ளது. புகைப்படம் எடுக்க வருபவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை செடிகளுக்கிடையே போட்டுவிட்டுச் செல்கின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதியும், தேயிலைத் தோட்டங்களை பாதுகாப்பதற்கும் இந்த தடையை விதித்துள்ளோம் என்று கூறினர்.

SCROLL FOR NEXT