சுற்றுலா

புதுச்சேரிக்கு வரப்போகுது இ-ரிக்‌ஷா: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியின் புல்வார்டு பகுதியில் விரை வில் இ-ரிக் ஷாக்களை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் (பி.ஆர்.டி.சி) அல்லது புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (பிடிடிசி) மூலம் இந்த இ-ரிக் ஷாக்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.

பெரிய நகரங்களில் காற்று மாசடைய 70 சதவீதம் அளவுக்கு, வாகனங்கள் வெளியிடும் புகையே காரணம் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில், புதுச்சேரியும் விதிவிலக்கல்ல என்பது மாசுக் கட்டுப்பாட்டு குழுமத்தின் ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மக்கள் தொகைக்கு ஏற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது.

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்ற வாகனங்களின் எண்ணிக்கையும், அதில் இருந்து அதிகளவில் வெளியேறும் புகையும் சுற்றுச்சூழல் சிக்கலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இத்தகைய சூழலில், வாகனங்களால் ஏற்படும் மாசை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக இன்னும் 3 மாதங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுபற்றி நமது ‘இந்து தமிழ்திசை’யில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். தற்போது புதுச்சேரியின் புல்வார்டு பகுதிகளில் விரைவில் இ-ரிக் ஷாக்களை அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்கான டெண்டரும் கோரப்பட்டுள்ளது.

டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் உதய்பூர் போன்ற நகரங்களில் இ-ரிக் ஷாக்கள் பிரபலமானவை. இ-ரிக் ஷாக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மட்டுமல்ல, மலிவானபோக்குவரத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. பேட்டரியில் இயங்கும்இ-ரிக் ஷாக்கள் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. இந்த இ-ரிக் ஷாக்கள் மூலம் குறுகிய சாலைகள், ஒடுங்கிய தெருக்களிலும் சென்று வர முடியும்.

“புதுச்சேரியை பொருத்தவரையில் மக்களுக்கான பொது போக்குவரத்து வசதிகள்மிகக்குறைவாக உள்ளது. இதனால் இ-ரிக் ஷாக்கள் விடப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்று போக்குவரத்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், இது குறித்து பேசிய புதுச்சேரி போக்குவரத்து துறை அதிகாரிகள்,“ புதுச்சேரியில் இ-ரிக் ஷாக்கள் விட அரசு முடிவெடுத்துள்ள நிலையில், முதற்கட்டமாக 60 இ-ரிக் ஷாக்கள் வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.

நான்கு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த வாகனம், ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 85 கி.மீ வரை செல்லும்.இதை இயக்க பல்வேறு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உரிமம், பதிவு மற்றும் அனுமதி வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த இ-ரிக் ஷாவில் மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புடன் பயணம் செய்யலாம்.

போக்குவரத்துத் துறை இ-ரிக்‌ஷாக்களை கொள்முதல் செய்து, அவற்றை இயக்குவதில் நல்ல அனுபவம் உள்ள ‘டிரான்ஸ் போர்ட்டர்’ அல்லது ஏஜென்சிக்கு ‘அவுட்சோர்ஸ்’ பணியாக தந்து விடுவோம். வாகனங்களின் இயக்கம் மற்றும்பராமரிப்பு ஆகியவற்றை அந்த குறிப்பிட்ட நிறுவனம் ஏற்கப்படும் நிலையில், கட்டணத்தை போக்குவரத்து துறை நிர்ணயம் செய்யும்.

இந்த இ-ரிக் ஷாக்கள் ஒரே மாதிரியான வண்ணத்தில் இருக்கும். இதன் மூலம் பொது மக்கள் இதை பயன்படுத்துவது இலகுவாக இருக்கும். இவற்றில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு, போக்குவரத்துத் துறையினரால் நிறுவப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். அதன் மூலம் நகரில் இயங்கும் ஒவ்வொரு இ-ரிக் ஷாவும் கண்காணிப்பில் இருக்கும்” என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT