தொன்மை, கலை, நாகரிகம், பண்பாடு, இலக்கியம், அரசியல், ஆன்மிகம் போன்ற பல்வேறு அடையாளங்களைத் தாங்கி நிற்கும் மதுரையின் மற்றொரு பெருமையாக ஜுலை 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது.
நவீனக் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் தானியங்கி டிஜிட்டல் நூலகமாக இந்த நூலகம் செயல்படத் தொடங்கியிருக்கிறது. இந்த நூலகம் மொத்தம் 6 தளங்களுடன் 3 லட்சம் புத்தங்கங்களுடன் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. அரிய நூல்கள் இடம்பெற்றுள்ளதோடு அண்மைக் கால எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் வரை இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.
தற்போது இந்த நூலகத்தைப் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் ஆர்வமாகப் பார்வையிட்டு வருகின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் இந்த நூலகத்தைப் பார்வையிட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலாவுக்கு வருவது போல் திரள்கின்றனர். இதனால், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருமலைநாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம் போன்ற சுற்றுலாத் தலங்கள் வரிசையில் தற்போது கலைஞர் நூலகமும் இணைந்து கொண்டது.
நூலகத்தைப் பார்வையிட வரும் மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நூலகத்தின் முகப்புத் தோற்றம் முதல் நூலக உள் அரங்குகளின் முன் நின்று சுயபடம் (செல்ஃபி) எடுத்து மகிழ்கின்றனர்.
குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களைக் கவருவதற்கான நோக்கத்தில் இந்த நூலகத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறார் அறிவியல் அரங்கம் குழந்தைகளைக் கவர்ந்துள்ளது.
ஓர் அறிவியல் பூங்காவில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த அறிவியல் அரங்கில் உள்ளன. மனிதனின் உடல் எடை, கோள்களுக்குக் கோள் மாறும். அந்த அடிப்படையில் குழந்தைகள் தங்கள் உடல் எடையை இந்த அறிவியல் அரங்கில் உள்ள உயர் தொழில்நுட்ப எடைக் கருவியில் நின்று ஒவ்வொரு கோள்களிலும் தங்களது எடை எவ்வளவு என்பதை அறியலாம்.
குழந்தைகள் நூலகப்பிரிவு சுவரின் ஓவியங்கள், விசாலமான இருக்கைகள் குழந்தைகளை ஆசை ஆசையாகப் புத்தகங்களை எடுத்துப் படிக்கத் தூண்டுகிறது. அதனால், தனியார், அரசுப் பள்ளி நிர்வாகங்கள் தற்போது அதிகளவில் பள்ளிக் குழந்தைகளை இந்த நூலகத்துக்கு அழைத்துவரத் தொடங்கி உள்ளன.
நூலகத்தின் தரைத்தளத்தில் வரவேற்பு அறை அருகே பார்வையாளர்கள் அமரும் இருக்கைகளும் பேனா வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி நூலகத்தின் ஒவ்வொரு வடிவமைப்பும், சிறப்புகளும் வாசிப்பையும், எழுத்தார்வத்தையும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.
சின்னஞ்சிறு குழந்தைகளின் வியப்பு, பள்ளி மாணவர்களின் ஆர்வம், பெரியவர்களின் பிரம்மிப்பு போன்றவற்றால் கலைஞர் நூற்றாண்டு நூலகம், தற்போது பார்வையாளர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.