சுற்றுலா

ஆண்டிபட்டி அருங்காட்சியகத்துக்கு புத்துயிர் அளிக்கப்படுமா?

என்.கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதான வளாகத்தில், ரூ.1.30 கோடியில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி 26-ல் அரசு அருங்காட்சியகம் அமைக்கப் பட்டது.

அருங்காட்சியகங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து கண்டெடுக்கப்படும் தொல்லியல் பொருட்களே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், தமிழகத்தில் முதன் முறையாக மாவட்டம் சார்ந்த தொல்லியல் பொருட்கள் கொண்ட அருங்காட்சியகமாக இது அமைந்துள்ளது. சுமார் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் முதல்தளம் 6 கூடங்களாகப் பிரிக்கப்பட்டு, அரசியல், இயற்கை, சமூகம், இலக்கியம் - பண்பாடு, பொருளாதாரம், தொழில் வரலாறுகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு முத்திரை நாணயங்கள், மாவட்டத்தின் முக்கிய பாறை வகையான சார்னோகைட் பாறை, கனிமங்கள், புதைப்படிமங்கள், விண்கற்கள், ஜமீன் கால புகைப்படங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், இவை ஒவ்வொன்றையும் தெளிவாக கண்டு ரசிக்க பிரத்யேக விளக்குகள், வழிந்தோடும் மெல்லிய இசை என பார்வையாளர்களை வரலாற்று காலத்துக்கே கொண்டு செல்லும் சூழ்நிலையுடன், இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி கட்டணமாக பெரியவர் களுக்கு ரூ.5, குழந்தைகளுக்கு ரூ.3 வசூலிக்கப்படுகிறது. கல்விச் சுற்றுலா வரும் பள்ளி மாணவர்களுக்கு அனுமதி கட்டணம் கிடையாது. ஆனாலும், இங்கு வந்து பல விஷயங்களை தெரிந்துகொள்ளும் ஆர்வம் பொதுமக்களிடையே இல்லை. இதனால் அருங்காட்சியகத்துக்கு குறைவான பார்வையாளர்களே வருவதால், களையிழந்து காணப்படுகிறது.

என்ன செய்யலாம்...?: பள்ளி, கல்லூரிகளுடன் ஒருங்கிணைந்து, முக்கிய தினங்கள், தலைவர்கள் பிறந்த நாள், விழா உள்ளிட்ட விசேஷ நாட்களில் அருங்காட்சியகத்தில் பல்வேறு போட்டிகள் நடத்தலாம். இதன்மூலம் மாணவர்கள் மட்டு மல்லாது, பெற்றோருக்கும் இது குறித்த விழிப்புணர்வு கிடைக்கும்.

சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சுற்றுலா விளம்பரப் பலகைகளில், ஆண்டிபட்டி அருங்காட்சியகமும் இடம் பெறச் செய்ய வேண்டும். இதனால், வெளிமாவட்டத்தினர் அருங்காட்சியகம் இருப்பது குறித்து தெரிந்துகொள்ள முடியும். இதற்கான முன்னெடுப்புகளை சுற்றுலாத்துறை மேற் கொள்ள வேண்டும்.

இது தான் பிரச்சினை...: இந்த அருங்காட்சியகத்துக்கு ஆரம்பம் முதலே பொறுப்பு அலுவலர்களே நியமிக்கப் பட்டு வருகின்றனர். இதனால், அவர்களால் முழுமையாகச் செயல்பட முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த காப்பகத்துக்கு என்று தனி காப்பாட்சியரை நியமிக்க வேண்டும்.

இது குறித்து அருங்காட்சியக ஊழியர்கள் கூறுகையில், தனி காப்பாட்சியர் நியமனம் இருந்தால் தான் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தவும், விளம்பரப்படுத்தவும், நிதி ஒதுக் கீடுகளை நேரடியாகப் பெறவும் முடியும். வாரம் ஒரு நாள் மட்டுமே வெளியூரிலிருந்து வரும் காப் பாட்சியர்களுக்கு நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மட்டுமே முடிகிறது. எனவே காலியாக உள்ள இடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றனர்.

தொல்லியல் எச்சங்களை மீட்டெடுப்பதே பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், கண்டெடுக்கப்பட்டவற்றை இளைய தலை முறையினர் பார்த்து மூதாதையர் வாழ்வியலை உணர்ந்து கொள்வதன் மூலமே இதன் நோக்கம் பூர்த்தியாகும். எனவே, மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT