தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பிரதான அருவியில் குறைந்த அளவில் விழும் தண்ணீரில் குளிக்கும் குறைவான சுற்றுலா பயணிகள். அடுத்த படம், ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும்  நடைபாதையில் நடமாடிய குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் 
சுற்றுலா

ஒகேனக்கல் | காவிரியில் நீர்வரத்து சரிவால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சரிவு காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையும் சரிந்தது.

பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. விநாடிக்கு 1000 கன அடிக்கும் கீழாக நீர்வரத்து சரிந்ததால் காவிரியாற்றில் பாறைகள் முழுமையாக வெளியில் தெரியத் தொடங்கியுள்ளன. அதேபோல, பிரதான அருவி, சினிபால்ஸ் அருவி ஆகியவற்றில் விழும் தண்ணீரின் வேகமும் கணிசமாக குறைந்துள்ளது.

ஒகேனக்கல் சுற்றுலா வருபவர்களில் பெரும்பாலானவர்கள் எண்ணெய் மசாஜ், அருவிக் குளியல், பரிசல் பயணம், மீன் உணவு ஆகியவற்றை விரும்புவது வழக்கம். தற்போது நீர்வரத்து கணிசமாக குறைந்து அருவியிலும் தண்ணீர் குறைந்துள்ளதால் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

நேற்று (ஜூலை 5-ம் தேதி) குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே ஒகேனக்கல்லுக்கு வருகை தந்தனர். நீர்வரத்து சரிவு காரணமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை குறைந்ததால் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள ஒகேனக்கல் தொழிலாளர்கள் வருவாய் இழப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அடுத்தடுத்த வாரங்களில் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்தால் ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பல வாரங்களுக்கு ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும். இந்த சூழல் ஏற்பட்டால் மேலும் வருவாய் பாதிப்படையும் என, சுற்றுலாவை நம்பியுள்ள ஒகேனக்கல் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT