பழநி: தமிழகத்திலேயே பழநியில் மட்டுமே இன்னும் குதிரை வண்டி சவாரி உள்ளது. பெரும்பான்மையாக வெளிமாநிலத்தவர் குதிரை வண்டி சவாரி செய்ய விரும்புவதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் காக்கப்படுகிறது.
வாகனங்கள் அதிகம் இல்லாத காலக் கட்டத்தில் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கும், பயணிகள் செல்வதற்கும் அவசர மற்றும் அத்தியாவசியத் தேவையாக இருந்தது குதிரை வண்டிதான். பேருந்து நிலையம், ரயில் நிலையம் என எங்கு பார்த்தாலும் குதிரை வண்டிகள் நிலையம் காணப்படும். டொக்...டொக்... டொக்... என்று குதிரை வண்டிகளின் சத்தம் கேட்காத சாலைகளே இருக்க முடியாது.
குதிரை வண்டிகளுக்கு போட்டியாக சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ வந்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக குதிரை வண்டிகள் மறையத் தொடங்கின. பின்னர், சாலைகளில் ஆட்டோக்கள், கார்கள் ஓட ஆரம்பித்த பிறகு, குதிரை வண்டியின் பயன்பாடு சுத்தமாக இல்லை.
ஆனால், திண்டுக்கல் மாவட்டம், பழநிக்கு வந்தால் மற(றை)ந்துபோன குதிரை வண்டிகள் சாலைகளில் ஒய்யாரமாக வலம் வருவதை பார்க்கலாம். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களை மட்டுமே நம்பி, தலைமுறை தலைமுறையாய் 50-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் இன்னும் ஈடுபட்டு வருவது வியப்பாக உள்ளது.
ரயில் நிலையத்திலிருந்து பழநி மலையடிவாரத்துக்கு ரூ.120, பேருந்து நிலையத்திலிருந்து மலையடிவாரத்துக்கு ரூ.80, ரோப் கார் மற்றும் வின்ச் ரயில் நிலையத்துக்கு ரூ.100, கிரிவலப் பாதையை சுற்றி வர ரூ.150 என கட்டணமாக வசூலிக்கின்றனர்.
குதிரை வண்டியில் பயணம் செய்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் அருமை. அதனால் ஆட்டோ, கார்களில் சென்று ஆன்மிக தலத்தை மாசுப்படுத்தாமல், குதிரை வண்டியில் பயணித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். பழநி வருவோருக்கு தண்டாயுதபாணி சுவாமியின் தரிசனமும், குதிரை வண்டிப் பயணமும் மறக்க முடியாத புதிய அனுபவத்தை கொடுக்கும்.
அரசு ஊக்கப்படுத்த வேண்டும்: தலைமுறை தலைமுறையாக குதிரை வண்டித் தொழிலில் ஈடுபட்டு வரும் பழநி குரும்பபட்டியைச் சேர்ந்த செல்வராஜ் கூறியதாவது:
என்னுடைய 16 வயதிலேயே குதிரை வண்டி ஓட்டும் தொழிலுக்கு வந்துவிட்டேன். 40 ஆண்டுகளாக குதிரை வண்டி ஓட்டி வருகிறேன். இதற்குமுன், பழநியில் 150-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் இருந்தன. தற்போது, 60-க்கும் குறைவான வண்டிகள் தான் உள்ளன.
கேரளா, ஆந்திரா பயணிகள்தான் குதிரை வண்டியில் பயணம் செய்ய அதிகம் விரும்புகின்றனர். சிலர் அவர்களாக பிரியப்பட்டு, நாங்கள் கேட்கும் கட்டணத்துக்கு கூடுதலாக கொடுப்பர்.
தற்போது, பழநியில் மட்டுமே குதிரை வண்டி சவாரி உள்ளது. சுற்றுலா தலங்களில் மோட்டார் வாகனங்களுக்கு பதிலாக குதிரை வண்டி சவாரியை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இதனால், இந்த தொழில் அழியாமல் இருக்கும். காற்று, ஒலி மாசு போன்ற பிரச்சினைகளும் இருக்காது.
பழநி நகராட்சி சார்பில், குதிரை வண்டி நிறுத்தப் பகுதியில் குதிரைகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்