உடுமலை: உடுமலை அருகே 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அமராவதி அணைப் பூங்கா பராமரிப்பின்றி பாழடைந்து வீணாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 20 கிமீ தொலையில் உள்ளது அமராவதிஅணை. கடந்த 1958-ல் அன்றைய முதல்வர் காமராஜரால் இந்த அணை கட்டப்பட்டது. அணை உருவானபோதே அணையின் முகப்பில் வலது, இடது பகுதிகளில் உள்ள காலியிடம் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பூங்காவாக அமைக்கப்பட்டது.
அணைக்கு எதிரே சிறுவர் விளையாட்டு பூங்காவும், மிருக காட்சி சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்டதாகும். பூச்செடிகள், நடைபாதைகள், செயற்கை நீரூற்றுகள், புல் தரைகள், விலங்குகளின் சிலைகள், நிழல் தரும் மரங்கள் என ரம்மிய மான சூழலுடன் பூங்கா ஏற்படுத்தப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள், அமராவதி அணைக்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு நுழைவுக் கட்டணமாக தனி நபருக்கு ரூ.5, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10, கார்களுக்கு ரூ.25, கனரக வாகனங்களுக்கு ரூ.50 என நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை வசூலாகிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் பூங்கா, பாலைவனமாக மாறியுள்ளது. தற்போதைய நிலையில், சவுக்கு, அசோக மரம், யூகலிப்டஸ் உள்ளிட்ட மரங்களும், வேலிச் செடிகளும் நிரம்பியுள்ளன. செயற்கை நீரூற்றுகள் துருப்பிடித்த நிலையிலும்,செயற்கை புல்வளர்ப்புகள் காடுகளைப்போலவும் மாறியுள்ளன.
பயணிகள் அமரும் இருக்கைகள் சிதைந்தும், சிலைகள்சிதிலமடைந்தும் உள்ளன.விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து பழுதடைந்துள்ளன. மிருகக்காட்சி சாலையில் இருந்த மான்,புறாக்கள், வெள்ளை எலி, வாத்து ஆகியவற்றை பராமரிக்க முடியாமல் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பழமை வாய்ந்த இப்பூங்காவை புனரமைப்பு செய்ய 4 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.1.60 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு அரசின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் எந்த நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப் படவில்லை. கலைஞர் நூற்றாண்டு விழா திட்டத்தின் கீழ் பூங்கா பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைத்த உடன் புனரமைப்பு பணிகள் நடைபெறும்’’ என்றனர்.