சுற்றுலா

வண்டலூர் பூங்காவில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் நுழைவுச்சீட்டு பெறும் சேவை

செய்திப்பிரிவு

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் க்யூஆர் கோடு, யுபிஐ பரிவர்த்தனை மூலம் நுழைவுச் சீட்டு பெறும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 180 வகையான, 2,500 வன உயிரினங்கள் பராமரிக்கப்படும் இந்தப் பூங்கா சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்களுக்கு முக்கிய பொழுது போக்கு இடமாகத் திகழ்கிறது. தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வருகின்றனர். வார நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பண்டிகை விடுமுறை நாட்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் வருகின்றனர்.

டிக்கெட் விற்பனைக்கு 10-க்கும் மேற்பட்ட கவுன்ட்டர்கள் இருந்தாலும், அதிக பார்வையாளர்கள், சில்லறை இல்லாதது உள்ளிட்டவற்றால் தாமதம் ஏற்படுகிறது. இதனால், குறிப்பிட்ட தேதியில் நுழைவுச் சீட்டு பெற, இணைய வழியில் டிக்கெட் பதிவு செய்யும் சேவை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், பணமில்லா பரிவர்த்தனை சேவையை பூங்கா நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நுழைவுச் சீட்டு கவுன்ட்டர் முன்பு வைக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, யுபிஐ பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணம் செலுத்தி, நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். கடந்த சில நாட்களாக பயன்பாட்டில் உள்ள இந்த சேவை, பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT