உடுமலை: உடுமலை அருகே சின்னாறு பகுதியில் சூழல் சுற்றுலா திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் வனக்கோட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கீழ் உடுமலை, அமராவதி வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிக்குள் தளிஞ்சி, தளிஞ்சி வயல், கோடந்தூர், ஆட்டுமலை, குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. அங்கு சுமார் 4 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
அமராவதி வனச்சரகத்துக்குட்பட்ட கூட்டாறு பகுதியில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் மலைவாழ் மக்கள் நலனுக்காக ‘சூழல் சுற்றுலா’ திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலமாக, குறைந்த கட்டணத்தில் பரிசல் பயணம், மலைகளின் நடுவே நடைபயணம், மலைவாழ் மக்கள் தயாரித்த மதிய உணவு, தேநீர் விநியோகிக்கப்பட்டது. இ
த்திட்டம் சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், அடுத்தடுத்து வந்த வன அலுவலர்கள் இத்திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்காததால், தொடங்கிய வேகத்திலேயே திட்டம் மூடுவிழா கண்டது. அதன்பின் பலமுறை மலைவாழ் மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறும்போது, "வனப்பகுதியில் கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று வாழ வேண்டிய நிலை உள்ளது. சூழல் சுற்றுலா திட்டத்தால் சுயஉதவிக் குழுவாக இணைந்த மலைவாழ் பெண்களுக்கு ஓரளவு வருவாய் கிடைத்தது. இத்திட்டம் முடங்கியதால் வருவாய் வாய்ப்பும் பறிபோய்விட்டது. அருகே கேரள மாநில வனத்துறை இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக முனைப்பு காட்டுகிறது. அங்குள்ள மலைவாழ் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மீண்டும் சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தி, எங்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்" என்றனர்.
மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் கணேஷ்ராமிடம் கேட்டபோது, "கரோனா பரவலுக்கு முன்பு வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் பின் நிறுத்தப்பட்டது. மலைவாழ் மக்கள் நலன் கருதி, மீண்டும் சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. அதுகுறித்து முறையாக அறிவிக்கப்படும்" என்றார்.
- எம்.நாகராஜன்