திறன்பேசி, க்யூஆர் கோடு, கடன் அட்டை என எதையும் பயன்படுத்தாமல் பணம் செலுத்த முடியுமா அல்லது கையில் பணமே இல்லாமல் எந்தவொரு பொருளையும் வாங்குவது சாத்தியமா? ஆம், அதனைச் செய்ய முடியும் என்கிறது Pay by Palm நுட்பம்.
பண்டமாற்றுமுறை, நாணயங்கள், கரன்சி என்றிருந்த பணப் பரிவர்த்தனை கணினி யுகத்தில் ஏடிஎம், இணையவழிப் பரிமாற்றம், கடன் அட்டை, மொபைல் கட்டண முறைகள் என விரிவடைந்தது. ஏஐ ஆக்கிரமிப்பு அதிகமாகிவரும் இன்றைய சூழலில் சீனா, நைஜீரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளங்கையைக் கொண்டு பணம் செலுத்தும் ‘Pay by Palm’ நுட்பம் வளர்ச்சி பெற்று வருகிறது.
ஒரு மனிதரின் கைரேகையைப் போல் மற்றொருவருடையது இருக்காது. ஒவ்வொரு தனிநபரையும் அடையாளப்படுத்திக் காட்டும் அந்த உயிரியல் அடையாளத்தை (Bio metric) வைத்து, எப்படிப் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது? யூபிஐ மூலம் பணம் செலுத்துவது போன்ற பயன்பாட்டு முறையே இதிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதற்கென்றே தனியாக வடிவமைக்கப்பட்ட ஒரு கருவியைக்கொண்டு நம் உள்ளங்கையில் உள்ள ரேகைகளை ‘ஸ்கேன்’ செய்து, அதில் உங்கள் பெயர், திறன்பேசி எண், வங்கிக்கணக்கு எண் உட்பட அனைத்து விவரங்களும் இணைக்கப்படுகின்றன.
இதன்மூலமாக, இந்த கைரேகைக்கு உரியவர் இவர் என்று அடையாளம் காணப்படுவதன் வழியாக உங்கள் வங்கிகணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
‘ஏடிஎம் பின் நம்பரை மறந்துவிட்டேன்’ என்று மண்டை யைச் சொறிந்து நிற்பவர்களுக்கும் ‘திறன்பேசியை மறந்துவிட்டேனே’ என்று ‘க்யூஆர் கோடு’ முன்பாகத் தலைகுனிபவர்களுக்கும் இது உதவிக்கரம் நீட்டும்.
நம் ஊரில் ‘வாட்ஸ்அப்’ போல சீனாவில் ‘வி சாட்’ (We Chat) பிரபலம். இதன் மூலமாகவும் பணம் செலுத்தலாம். இந்த ‘வி சாட்’ உடன் ‘டென்சென்ட்’ (Tencent) என்கிற நிறுவனம் இணைந்து, அங்குள்ள ‘மெயின்லேண்ட்’ என்கிற இடத்தில் மட்டும் முதலில் இந்த ‘Pay by Palm’ அறிமுகப்படுத்தப்பட்டது. அது சீனா முழுவதும் விரிவாக்கம் பெற்றது.
உலகம் முழுக்கப் பரவி வரும் இந்த நுட்பத்தை 2020ல் ‘அமேசான் ஒன்’ என்கிற பெயரில் அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்காகக் கொணர்ந்தது. ‘என்ன படித்தாலும் கைநாட்டுதான் வைக்கவேண்டி யிருக்கிறது’ என்று வேடிக்கையாகச் சொன்னாலும், இந்த உயிரியல் அடையாளத்தைப் பயன்படுத்துவது நம் பணத்தையும் தரவுகளையும் பாதுகாக்கத் தற்போது சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.
இந்தத் தொழில் நுட்பம் விரைவில் இந்தியாவிலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நிகழ்ந்தால், உங்கள் உள்ளங்கையை வைத்தே உங்கள் வங்கிக்கணக்கின் இருப்பு எவ்வளவு என்று சொல்லிவிட முடியும்.
- ஜி.சுரேஷ்