தொழில்நுட்பம்

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...

நவ.21 - உலகத் தொலைக்காட்சி நாள்

பிருந்தா சீனிவாசன்

இன்று தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடுகள் மிகக் குறைவு என்கிற நிலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் ஒளிபரப்பாகின்றன. ஆனால், தொலைக்காட்சி வரலாற்றில் மிகச் சில நிகழ்ச்சிகளை மட்டுமே கோடிக்கணக்கானோர் பார்த்திருக்கிறார்கள். அவற்றில் சில:

விளையாட்டு மட்டுமல்ல... - உலக அளவில் அதிகமானோரால் விரும்பப்படும் விளையாட்டான கால்பந்து, தொலைக்காட்சிகளிலும் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் விளையாட்டாகவும் இருக்கிறது. 2022இல் நடைபெற்ற அர்ஜெண்டினாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை உலகம் முழுவதும் 150 கோடிக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள்.

தொலைக்காட்சித் தொடர்: அமெரிக்கக் கடலோரப் பாதுகாப்பில் ஈடுபடுகிறவர்களைக் குறித்த தொலைக் காட்சித் தொடரான ‘Baywatch’, உலகிலேயே மிக அதிகமானோரால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர். 1989 முதல் 2001 வரை வெளியான இந்தத் தொடரை 140 நாடுகளைச் சேர்ந்த 110 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள்.

புத்தாண்டுக் கொண்டாட்டம்: சீனாவில் புத்தாண்டுப் பிறப்பையொட்டி பாடல், நடனம், கொண்டாட்டம் அடங்கிய நேரடி ஒளிபரப்பை 100 கோடிக்கும் அதிகமானோர் ஆண்டுதோறும் பார்க்கிறார்கள். உலக அளவில் அதிகமானோரால் பார்க்கப்படும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியும் இதுதான். சீனாவில் இதை ‘வசந்த விழா’ என்கிறார்கள்.

வானியல் விந்தை: பொதுவாகவே அறிவியல் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறவர்கள் குறைவு என்கிற எண்ணத்தை அமெரிக்க வானியலாளர் கார்ல் சாகனின் ‘Cosmos: A Personal Voyage’ அறிவியல் ஆவணப்படம் மாற்றியது. 1980இல் ஒளிபரப்பான இதையும் இதன் தொடர்ச்சியாக 2014இல் வெளியான ‘Cosmos: A Spacetime Odyssey’ ஆவணப் படத்தையும் 60 நாடுகளைச் சேர்ந்த 40 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள்.

வலைத் தொடர்: கொரியாவில் குழந்தைகளின் விளையாட்டான ‘ஸ்க்விட்’டின் பெயரிலேயே வெளியாகியிருக்கும் தென்கொரிய சர்வைவல் - த்ரில்லர் வலைத் தொடரான ‘Squid Game’ மிக அதிக நேரம் பார்க்கப்பட்ட தொடர். வாங் டாங் ஹ்யூக் உருவாக்கத்தில் வெளியாகியிருக்கும் இதன் சீசன் 1 பகுதியை உலகம் முழுவதும் 25.2 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள்.

நேருக்கு நேர்: பிரபலங்களின் நேர்காணலுக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எப்போதும் தனி இடம் உண்டு. அமெரிக்கப் பாடகர், நடனக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனை அமெரிக்க ஊடகப் பிரபலம் ஓப்ரா வின்ஃபிரே 1993இல் எடுத்த நேர்காணல்தான் உலக அளவில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட (9 கோடி பேர்) தனிநபர் நேர்காணல்.

அரசியல் அரங்கம்: அண்மைக்காலமாக மக்கள் அரசியல் விவாத நிகழ்ச்சிகளையும் விரும்பிப் பார்க்கிறார்கள். 2016 அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி ஹிலாரி கிளிண்டனுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியை 8.4 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். உலக அளவில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட அரசியல் விவாத நிகழ்ச்சி இது.

சிறார் உலகம்: சிறார்கள் பெரும்பாலும் அனிமேஷன் படங்களைத்தான் விரும்பிப் பார்க்கிறார்கள். ஸ்டீபன் ஹிலன்பர்க் உருவாக்கத்தில் வெளியான ‘SpongeBob SquarePants’ உலக அளவில் குழந்தைகளால் அதிமாகப் பார்க்கப்பட்ட அனிமேஷன் தொலைக்காட்சித் தொடர். அமெரிக்காவில் 1999இல் இதன் முதல் அத்தியாயம் வெளியானது. இதை உலகம் முழுவதும் மாதந்தோறும் 5 கோடி பேர் பார்க்கிறார்கள்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT