குறியீட்டுப் படம்

 
தொழில்நுட்பம்

எதிர்காலத்தில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம்: ஐநா அறிவியல் குழு எச்சரிக்கை

மோகன் கணபதி

எதிர்காலத்தில் மனிதர்களால் செயற்கை நுண்ணறிவை வழிநடத்தவோ, கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முடியாத நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தை எழுப்பியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயற்கை நுண்ணறிவு குறித்த சுதந்திரமான சர்வதேச அறிவியல் குழு, ஏஐ தொடர்பாக இன்னும் அதிக பாதுகாப்பு வழிமுறைகள் அவசியமாகின்றன என்று தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான அச்சமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான சுதந்திரமான சர்வதேச அறிவியல் குழு தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது

அந்த அறிக்கையில், ‘ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் கடந்த ஜூலை மாதம் நடத்திய சோதனையின் போது, செயற்கை நுண்ணறிவு ஏஜெண்ட்டால் 'HuggingFace' என்ற இணையதளம் ஊடுருவப்பட்டுள்ளது. ஏஐ ஏஜென்ட்டுகள் பயனரின் சார்பாகத் தாங்களாகவே பணிகளைச் செய்யக்கூடிய மென்பொருட்களாகும்.

நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காரணிகளால் இந்த பாதுகாப்பு மீறல் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இது ஒரு நாள் மனிதர்களால் செயற்கை நுண்ணறிவை வழிநடத்தவோ, கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முடியாத நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

ஏஐ ஏஜெண்டுகள் அதிக திறன் கொண்டவையாகவும், கண்காணிப்பதற்கு கடினமானவையாகவும், ஓட்டைகளைக் கண்டறிவதிலும், தங்கள் செயல்பாடுகளை மறைப்பதிலும் சிறந்தவையாகவும் மாறி வருகின்றன. அவற்றை நம்பகத்தன்மையுடன் மனிதர்களால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.

தற்போதைய பாதுகாப்பு வழிமுறைகள் செயலிழக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பாதுகாப்பு வழிமுறைகள் ஈடுகொடுக்கவில்லை. எனவே, ஏஐ ஏஜெண்டுகள் தங்களுக்கெனத் தனிப்பட்ட இலக்குகளை உருவாக்கிக்கொள்ளவும், பாதுகாப்பு அறிவுறுத்தல்களை தெரிந்தே மீறவும், தங்கள் செயல்களை மறைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

செயற்கை நுண்ணறிவு ஏஜெண்டுகள் அதிக திறனுள்ளவர்களாகவும், தாங்களாகவே செயல்படக்கூடியவர்களாகவும், கண்காணிப்பதற்கு கடினமானவர்களாகவும் மாறும்போது பாதுகாப்பு நடைமுறைகள் போதுமானதாக இல்லாமல் போகலாம். எனவே, இன்னும் அதிக பாதுகாப்பு வழிமுறைகள் அவசியமாகின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT