தொழில்நுட்பம்

உலகை இணைக்கும் தொலைக்காட்சி

நவ.21 - உலகத் தொலைக்காட்சி நாள்

ராகா

தொலைக்காட்சி என்பது வெறும் பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல. விளையாட்டு, செய்திகள், விளம்பரங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு அம்சங்களின் வழியாக உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களை ஒரே புள்ளியில் இணைக்கும் ஊடகமாகக் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாகத் திகழ்கிறது.

உலக அளவில் மக்களை ஒன்றிணைப்பதில் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தனியிடம் உண்டு. கால்பந்து, கிரிக்கெட் உலகக் கோப்பைகள், ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக் கானோர் தொலைக்காட்சி முன்பு கூடுவது வழக்கம். வெவ்வேறு நேர மண்டலங்களில் பகல், இரவு என நேரம் மாறுபட்டாலும், தங்களுக்குப் பிடித்த அணிகளின் போட்டிகளை விழித்திருந்து ரசிப்பார்கள். ஒரு கோல், ஒரு சாதனை, ஒரு வெற்றி எனப் போட்டியின் ஒவ்வொரு தருணமும் உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே ஒரே மாதிரியான உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

அதேபோல், உலகின் ஏதோ ஒரு பகுதியில் போர், நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம்போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழும் போது, தொலைக்காட்சி வாயிலாக அதன் பாதிப்புகளை அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது. நேரலைச் செய்திகள், கள நிலவரங்கள் மூலம் உலகெங்கும் சென்றடையும் தகவல்கள், பாதிக்கப் பட்டவர்களுக்காகப் பிரார்த்திப்பது, நிவாரண உதவிகளை வழங்க முன்வருவது என மனிதநேயத்தையும் ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்துவதில் தொலைக்காட்சி முக்கியப் பங்கு வகிக்கிறது.

சோதனைகளைக் கடந்து சாதனைகளையும் கொண்டாட வைக்கிறது தொலைக்காட்சி. விண்வெளி ஆய்வு, ராக்கெட் ஏவுதல், அரசியல் தலைவர்களின் பதவியேற்பு போன்றவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு களை உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வர்களும் ஒரே நேரத்தில் காண முடிகிறது.

மேற்கத்திய நாடுகளில் பிரபலமான பிக் பிரதர், காட் டேலன்ட் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சி வடிவங்கள் பல்வேறு நாடுகளின் உள்ளூர் மொழி, ரசனைக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. ஆடல், பாடல், சமையல், திறமைகளை வெளிப்படுத்தும் போட்டிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு உண்டு.

பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகைகளின்போது ஒளிபரப் பாகும் சிறப்பு நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள், பிரபலங்களுடனான நேர்காணல்கள் ஆகியவற்றை வெளிநாடு களில் வசிக்கும் தமிழர்களும் பார்த்து ரசிக் கின்றனர். இதன்மூலம் தாய்மொழி, கலாச்சாரம் ஆகியவற்றுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிகிறது.

சொந்த நாடு மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளின் உணவு, உடை, கலை வடிவங்கள் குறித்த நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள் மூலம் பிற கலாச்சாரங்களைப் பற்றியும் வீட்டிலிருந்த படியே அறிந்துகொள்ள முடிகிறது. திறன்பேசி, ஓடிடி எனப் புதுமைகள் பல வந்து விட்டபோதும் அனைத்து எல்லைகளையும் கடந்து உலக மக்களை இணைக்கும் பாலமாகத் தொலைக்காட்சி இன்றும் திகழ்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT