தொழில்நுட்பம்

பட்டித்தொட்டி எங்கும் விழிப்புணர்வூட்டும் பெட்டி

நவ.21 - உலகத் தொலைக்காட்சி நாள்

ம.சுசித்ரா

தொலைக்காட்சிப் பெட்டி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் ஆற்றல்மிக்க தகவல் தொடர்பு சாதனமாக இருந்து வருகிறது. உலகத்தில் எங்கு நடக்கும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் நேரலையாக ஒளிபரப்பும் கருவி இது. இதனால், உலக நடப்புகளை நேரடியாகக் காட்சிப்படுத்தி மக்களை விழிப்புடன் வைத்திருக்க முடியும். இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பின் கல்வி, சுகாதாரம், விவசாயம் சார்ந்து நாட்டு மக்களுக்கு வழிகாட்டுவதிலும் சமூகச் சீர்திருத்த உணர்வை ஊட்டுவதிலும் தொலைக்காட்சி ஊடகம் பல மைல்கற்களைக் கடந்திருக்கிறது.

புரட்சிக்கான நிகழ்ச்சி: 1960களில் நிலவிய கடுமையான வறட்சியும், பிஹார் பஞ்சமும் (1966-67) இந்தியாவை உணவுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கச் செய்தன. இந்த நெருக்கடியைச் சமாளிக்க வீரிய ரக விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி கள், நவீன இயந்திரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி விவசாய உற்பத்தியைப் பெருக்கி, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் பசுமைப் புரட்சியை நாடு தழுவியது.

நாடெங்கிலும் உள்ள வேளாண் பெருமக்களுக்குப் பசுமைப் புரட்சியைக் கொண்டுசேர்க்க அன்றைய இந்திய அரசு தொலைக்காட்சி ஊடகத்தைப் பயன்படுத்த முடிவு செய்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1967 குடியரசு நாளில், ‘கிரிஷி தர்ஷன்’ சிறப்பு வேளாண் நிகழ்ச்சியை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தொடங்கிவைத்தார்.

முதல் கட்டமாக 80 கிராமங்களைச் சென்றடைந்த இந்நிகழ்ச்சி பிறகு மொழிவாரியாக வடிவம் பெற்றது. இந்தியாவின் முதல் விவசாய விழிப்புணர்வுத் தொலைக் காட்சி நிகழ்ச்சி இதுவே. தமிழ்நாட்டில், ‘வயலும் வாழ்வும்’ என்கிற பெயரில் ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது, ‘வேளாண் பார்வை’ எனும் பெயரில் தொடர்கிறது.

நமக்கு இருவர்: நாட்டின் மிகவும் பின்தங்கிய கிராமங்களுக்குச் செயற்கைக்கோள் மூலம், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ முழக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தைக் கற்பிக்கும் மாபெரும் முயற்சி 1975இல் முன்னெடுக்கப் பட்டது.

இதன் பொருட்டு இந்தியாவின் இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் கூட்டாக இணைந்து ‘சைட்’ (SITE) எனும் பரிசோதனைத் திட்டத்தைச் செயல்படுத்தின. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக 1980-90களில் பெண் உரிமை, பாலினச் சமத்துவம், வரதட்சிணை ஒழிப்பு, குடும்பக் கட்டுப்பாடு போன்ற சமூகப் பிரச்சினைகள் நாடக வடிவில் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன.

‘பல்ஸ் போலியோ’ (Pulse Polio) பிரச்சாரத்தின்போது பிரபலங்களை வைத்து எடுக்கப்பட்ட சுகாதாரத் துறையின் விளம்பரங்கள் மூலம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, இந்தியா போலியோ இல்லாத நாடாக மாற, தொலைக்காட்சிப் பெரிதும் உறுதுணையாக இருந்தது.

முந்தும் தமிழகம்: தொலைக்காட்சி விழிப்புணர்வுப் பயணத்தில் தமிழ் நாட்டுக்குத் தனியிடம் உண்டு. பெருநகரங்களைத் தவிர, பிற ஊர்களில் வசதியான இல்லங்களில் மட்டுமே வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இருந்த காலம் அது. 2000களின் தொடக்கத்திலேயே பட்டித்தொட்டி எங்கும் வீடுதோறும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அரசு நலத்திட்டத்தின் வழியாக விநியோகம் செய்யப்பட்டன. இதனால், ஏழை, பணக்காரர் என்கிற பாகுபாடின்றி வீடுதோறும் தொலைக்காட்சிப் பெட்டி எனும் நிலை எட்டப்பட்டது.

இதுதவிர வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி முதலான இயற்கைப் பேரிடர்களின்போதும், கரோனா போன்ற பெருந்தொற்றுப் பரவல் காலத்திலும் பொது மக்களுக்கு முன்னெச்சரிக்கை, பாதுகாப்புக்கான வழிகாட்டுதலை வழங்குவதில் தொலைக்காட்சி பெரும் பங்காற்றுகிறது. முக்கியமாக, அரசின் நலத்திட்டங்கள், தேர்தல் விழிப்புணர்வு உள்ளிட்ட சமூகநலம் சார்ந்த செய்தித் தொகுப்புகள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஒளிபரப்பப்படுவதால் பெருவாரியான மக்களின் செல்வாக்குமிக்க ஊடகமாகத் தொலைக்காட்சியே இன்றளவும் திகழ்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT