வாஷிங்டன்: 89 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட புகழ்பெற்ற ஓவியம் ஒன்றில், நபர் ஒருவர் ஸ்மார்ட்போன் போன்ற ஒரு பொருளைக் கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இத்தாலிய-அமெரிக்க ஓவியரான உம்பர்ட்டோ ரொமானோ (Umberto Romano) என்பவரால் 1937-ஆம் ஆண்டு வரையப்பட்ட 'மிஸ்டர் பின்சன் அண்ட் தி செட்லிங் ஆஃப் ஸ்பிரிங்ஃபீல்ட்' (Mr Pynchon and the Settling of Springfield) என்ற ம்யூரல் பாணி ஓவியம் தான் இந்த விவாதத்துக்கு காரணம்.
17-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பகுதியில் பூர்வக்குடி மக்களுக்கும், ஆங்கிலேய குடியேறிகளுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பை இந்த ஓவியம் சித்தரிக்கிறது.
இந்த ஓவியத்தின் நடுவே இருக்கும் பழங்குடியின நபர் ஒருவர், தனது கையில் கருப்பு நிறத்தில், செவ்வக வடிவிலான ஒரு பொருளைப் பிடித்துக்கொண்டு, நாம் இன்று ஸ்மார்ட்போனைப் பார்ப்பது போன்றே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
இந்த ஓவியத்தைப் பகிர்ந்த பல சமூக வலைதள பயனர்கள், “1937-ல் வரையப்பட்ட ஓவியத்தில் ஐபோன் உள்ளதா? இது டைம் டிராவல் செய்ததற்கான ஆதாரமா?” என்று வியப்புடன் கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இருப்பினும், இந்த ஓவியத்தில் இருப்பது எந்தவொரு நவீனத் தொழில்நுட்பச் சாதனமும் அல்ல என்று கூறப்படுகிறது. 17-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய குடியேறிகள், அமெரிக்க பழங்குடியின மக்களுடன் வர்த்தகம் செய்த போது வழங்கிய சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி தான் அது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அப்பொருளை பூர்வக்குடி நபர் ஒருவர் ஆச்சரியத்துடன் உற்று நோக்கும் பாவனை, ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. சிலர் அது சிறிய அளவிலான மத புத்தகமாகவோ அல்லது ஏதேனும் ஆயுதமாகவோ இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
1930-களில் அமெரிக்க பொருளாதார மந்தநிலையின் போது, கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் ஸ்பிரிங்ஃபீல்ட் அஞ்சலகத்தின் சுவர்களுக்காக இந்த ஓவியம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.