திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் நடைபெறும் மண்டல கால வழிபாடு கடந்த 17-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் யாத்திரையைப் பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் மாற்றும் வகையில் பயண விவரங்கள், தங்கும் வசதிகள் மற்றும் உள்ளூர் அறிவிப்புகளை 6 மொழிகளில் வழங் கும் ‘சரண்’ (SARAN - Sabarimala Assistance and Route Advisory Network) என்ற டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது. கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.எம். ஷாஜி இந்த ‘சரண்’ தளத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் சபரிமலைக்குச் செல்லும் வழித்தடங்களில் உள்ள ஓய்வு மையங்கள், அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் உள்ளூர் அறிவிப்புகள் உள்ளிட்ட தகவல்களை ஒரே இடத்தில் பெறலாம்.
மலையாளம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 6 மொழிகளில் இந்தச் சேவை கிடைக்கிறது. பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கியூஆர் குறியீட்டை கைபேசியில் உள்ள கேமரா மூலம் ஸ்கேன் செய்து, தனியாக எந்தச் செயலியையும் பதிவிறக்கம் செய்யாமல் இந்தத் தளத்தைப் பயன்படுத்தலாம்.
மேலும் https://saran.lsgdpr.in/ லிங்க் வாயிலாகவும் இந்த சேவையை பெறலாம். இதில் உள்ள வசதியைப் பயன்படுத்தி அருகிலுள்ள ஓய்வு மையங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள், ஏடிஎம் மையங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களையும் கண்டறிய முடியும். தினசரி பூஜை நேரங்கள் அன்னதானம், சிறப்புப் பேருந்து சேவைகள், மருத்துவ முகாம்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படும்.