சென்னை: இந்தியாவில் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் சைபர் பாதுகாப்பு செயலியான சஞ்சார் சாத்தி மொபைல் செயலி கட்டாயம் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த உத்தரவை போன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அரசு தெரிவித்துள்ளதாக தகவல்.
உலக அளவில் மிகப்பெரிய டெலிபோன் சந்தைகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. சுமார் 1.2 பில்லியன் பயனர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்நிலையில், தொலைத்தொடர்பு அமைச்சகம் மொபைல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல். இதுகுறித்து பிரிட்டிஷ் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் அடுத்த 90 நாட்களுக்குள் சைபர் பாதுகாப்பு செயலியான சஞ்சார் சாத்தி செயலி ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதை பயனர்கள் டிஸேபிள் செய்யாத வகையில் இருக்க வேண்டும் என்றும் செல்போன் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள பிரதான நிறுவனங்களிடம் அரசு தெரிவித்துள்ளதாக தகவல்.
இந்த செயலியின் மூலம் ஐஎம்இஐ மோசடி, தொலைந்துபோன அல்லது திருடுபோன செல்போன்களை கண்டறியவும், ஒருவர் பெயரில் பயன்பாட்டில் உள்ள சிம் கார்டுகளின் விவரம், இந்திய எண்ணில் வரும் சர்வதேச அழைப்புகள் குறித்தும் புகார் அளிக்கலாம்.