தொழில்நுட்பம்

டிவியின் புதுத் தோற்றம்!

நவம்பர் 21 - உலகத் தொலைக்காட்சி நாள் சிறப்புப் பகிர்வு.

ராகா

காலங்கள் மாறினாலும் இன்றும் புது வீட்டுக்குக் குடிபோகிறோம் என்றால் வாங்க வேண்டிய முக்கியமான மின்னணு சாதனங்களின் பட்டியலில் தொலைக் காட்சிப் பெட்டிக்கென்று தனி இடம் உண்டு. தட்டையான வடிவத்தில் திரையரங்கில் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரக்கூடிய வகையில் இன்று விதவிதமாக தொலைக்காட்சிப் பெட்டிகள் அறிமுகமாகிவிட்டன.

ஸ்மார்ட் டிவி: அன்று முதல் இன்றுவரை பொழுதுபோக்கவும், செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், அறிவை வளர்க்கவும்தான் பெரும்பாலானோர் தொலைக்காட்சியைப் பார்க்கின்றனர். அதே நிலைமைதான் இன்றும் தொடர்கிறது என்றாலும் கேபிள், டி.டி.எச். ஆகியவற்றுக்கு அடுத்து ஓடிடி தளங்களின் வருகையால் சாதாரணமாக இருந்த டிவிகள், தற்போது ‘ஸ்மார்ட் டிவி’களாக மாறியுள்ளன.

கேபிள், டி.டி.எச். தளங்களில் தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக்கொள்ளலாமே தவிர, அந்தந்த அலைவரிசையில் அந்த நேரத்தில் என்ன ஒளிபரப்பு ஆகிறதோ அதையே நம் தேர்வாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், ஸ்மார்ட் டிவியின் வருகைக்குப் பிறகு எந்த ஓடிடி தளத்தைத் தேர்வு செய்யலாம், எதைப் பார்க்கலாம் எவ்வளவு நேரம் பார்க்கலாம், சில காலம் நிறுத்தி வைத்து மீண்டும் தொடரலாம் என்பது போன்ற அனைத்து வசதிகளும் பார்வையாளரின் விருப்பமாக மாறி விட்டது.

விளம்பர முத்துகள்: டிவி நிகழ்ச்சி என்றாலே இடையில் வரும் விளம்பரங்களோடு சேர்ந்து பார்ப்பதில்தான் சுவாரசியம். முக்கிய மான ஒரு நிகழ்ச்சி அல்லது திரைப்படக் காட்சியின்போது விளம்பரம் வந்துவிட்டால், மனதுக்குள் திட்டியதெல்லாம் மறக்க முடியாத பழைய அனுபவங்களாகிவிட்டன.

இன்றைக்கு ஒவ்வொரு தளத்தையும் ‘சப்ஸ்கிரைப்’ செய்து பார்க்கும் வசதி வந்துவிட்டதால் விளம்பரம் எனும் முத்துகளைத் தவறவிட்டு வருகிறோம். அப்படியே ஓடிடி தளங்களில் விளம்பரங்களைக் காண நேரிட்டாலும் ஓரிரு விளம்பரங்களே அந்த நிகழ்ச்சி அல்லது திரைப்படம் முடியும்வரை மீண்டும்மீண்டும் வருகின்றன.

என்னென்ன மாற்றங்கள் வந்தாலும் இன்றும் டிவியைப் காட்டித்தான் பெரும்பாலான இல்லங்களில் குழந்தைகளுக்குச் சாப்பாடு ஊட்டப்படுகிறது. அன்றைக்கு கேபிள் டிவி, இன்றைக்கு யூடியூப் டிவி என்பதுதான் வித்தியாசம். ஸ்மார்ட் டிவிகள் பழைய டிவிகளுக்கு மாற்றாக வந்துவிட்டபோதும், ஒவ்வொரு வீட்டிலும் ‘ரிமோட்’டுக்கான சண்டை மட்டும் மாறியதாகத் தெரியவில்லை!

SCROLL FOR NEXT