தொழில்நுட்பம்

சீராகிறது மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம்: தற்போதைய நிலை என்ன?

வேட்டையன்

வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய மென்பொருள் சேவை சர்வதேச அளவில் இன்று முடங்கியது. இந்நிலையில், தற்போது அதன் சேவைகள் இயல்பு நிலை நோக்கி மெதுவாக சீராகி வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அவுட்லுக், டீம்ஸ், கோபைலட், ஒன்டிரைவ், ஷேர்பாயிண்ட், டிபெண்டர் எக்ஸ்டிஆர் உள்ளிட்ட சேவைகள் சர்வதேச அளவில் முடங்கின.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவன சேவை பாதிக்கப்பட்டது. இதனால் மைக்ரோசாஃப்ட் சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மில்லியன் கணக்கான பயனர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சேவைகளை மீட்டமைப்பதற்கான பணியை தங்கள் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இன்று காலை தெரிவித்திருந்தது.

இது குறித்து சுமார் 74 நாடுகளை சேர்ந்த பயனர்கள் டவுன் டிடெக்டர் என்ற தளத்தில் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது முடக்கப்பட்ட சேவை இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பாதிக்கப்பட்ட சேவைகளை மீட்டமைக்கும் பணியில் சற்று பின்னடைவை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது முடங்கிய சேவைகள் அனைத்தும் மேம்பட்டு வருவதாகவும், மின்னஞ்சலுக்கான க்யூஸ் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்புகள் காரணமாக சில பயனர்கள் சேவையைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என்றும், மின்னஞ்சல் அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

சேவை முடக்கத்துக்கு காரணம் சர்வர்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களே என்று நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இது சைபர் தாக்குதல் காரணமாக இல்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம் காரணமாக இந்தியாவில் விமான சேவை மற்றும் ஐடி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. பிரிட்டனில் தேசிய சுகாதார சேவை மற்றும் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. சிங்கப்பூர், ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT