தொழில்நுட்பம்

சேவையை மீட்டமைக்கும் பணியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மும்முரம்: தொடரும் முடக்கம்

வேட்டையன்

வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 365 சேவைகள் முடங்கி உள்ளன. இதில் அவுட்லுக், டீம்ஸ் உள்ளிட்ட சேவைகளும் அடங்கும். அதை மீட்டமைக்கும் பணியல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சேவைகள் இன்று (நவ.13) அதிகாலை சர்வதேச அளவில் முடங்கின. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவன சேவை முடங்கி உள்ளது. சுமார் 74 நாடுகள் மைக்ரோசாஃப்ட் 365 சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மில்லியன் கணக்கான பயனர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சேவைகளை மீட்டமைப்பதற்கான பணியை தங்கள் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்திருந்தது.

இருப்பினும் அந்நிறுவன சேவை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த சூழலில் சேவையை மீட்டமைக்கும் நோக்கில் மேற்கொண்ட பணிக்கு தாங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. தற்போது அதற்கான மாற்று வழியை கண்டறிந்து வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சர்வார்களை ரீஸ்டார்ட் செய்து சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளதாக விளக்கம் தந்துள்ளது.

என்ன நடந்தது?

மென்பொருள் சேவை நிறுவனங்களில் உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசாஃப்ட். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் முக்கிய சேவைகள் முடங்கி உள்ளன.

இணையதள சேவைகள் பாதிப்பு குறித்த தகவலை அறிய உதவும் டவுன் டிடெக்டர் தளத்தில் மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம் குறித்து பயனர்கள் தெரிவித்துள்ளனர். அதில் மைக்ரோசாஃப்ட் 365-ன் மின்னஞ்சல் சேவை வழங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அவுட்லுக், டீம்ஸ், மைக்ரோசாஃப்ட் ஸ்டோர், ஏஐ சேவைகளை வழங்கும் கோபைலட் உள்ளிட்ட சேவைகளை இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதல் பயனர்களால் பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பாதிக்கப்பட்ட சேவைகளை மீட்டமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வர் பாதிப்பு காரணமாக சேவைகள் முடங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தரப்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. ஒரே நேரத்தில் அதிகப்படியான லோட் (பயன்பாடு) காரணமாகவும், தானியங்கு சோதனையின் போது ஏற்பட்ட சிக்கலால் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்திருந்தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT