சென்னை: வாட்ஸ்அப் கணக்குகளை மெட்டா நிறுவனம் ‘ரிவ்யூ’-வில் வைத்துள்ளதாக பயனர்கள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். இதை உறுதி செய்யும் விதமாக வலைதளம், சமூக வலைதள சேவை பாதிப்பு குறித்த தரவு தகவலை அறிய உதவும் ‘டவுன் டிடெக்டர்’ தளத்தில் பயனர்கள் இதை உறுதி செய்துள்ளனர்.
இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணி முதல் வாட்ஸ்அப் பயனர்கள் இந்த சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். உங்கள் வாட்ஸ்அப் கணக்கு 24 மணி நேரத்துக்கு ரிவ்யூவில் உள்ளது என்ற தகவலுடன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தடை செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் உள்ளதாக தகவல்.
இதன் காரணமாக வாட்ஸ்அப் மெசஞ்சரின் அனைத்து அம்சங்களையும் பயனர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல். இதை பயனர்கள் சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளனர்.
எங்களது தளத்தின் சேவையை தவறாக பயன்படுத்த முயற்சிப்பவர்கள், மற்ற பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அத்தகைய வாட்ஸ்அப் கணக்குகளை முடக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். சில சமயங்களில் இதில் தவறுகள் ஏற்படலாம். அப்படி ஏதேனும் இருந்தால் அந்த பயனர்களின் கணக்கு மீண்டும் விரைவாக சரிசெய்ய பயன்பாட்டுக்கு கொண்டு வர நாங்கள் முயற்சிக்கிறோம்” என்று மெட்டா தரப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சில பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் ரிவ்யூவில் வைத்துள்ளது மெட்டா.