மென்பொருள் உருவாக்கத் துறையில் (Software Engineering) சிஸ்டம் டிசைன் (System Design), ஆர்க்கிடெக்சர் வரைபடங்கள் (Architecture Diagrams), ஃப்ளோசார்ட்டுகள், தொழில்நுட்ப ஆவணங்களைத் (Technical Documentation) தயாரிப்பது சிக்கலான பணியாகும். வழக்கமான வரைபட உருவாக்கக் கருவிகளைப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு வடிவத்தையும் சரியான முறையில் நகர்த்தி வைப்பதிலும் இணைப்புக் கோடுகளைச் சீரமைப்பதிலும் பல மணிநேரம் விரயமாகும். இதற்கொரு தீர்வாக உருவெடுத்துள்ளது Eraser.io என்னும் செய்யறிவுத் தளம்.
எழுத்து வடிவில் கட்டளைகளை (Text Prompts) உள்ளீடு செய்தாலே தரமான சிஸ்டம் ஆர்க்கிடெக்சர், சீக்வென்ஸ் வரைபடங்களை (Sequence Diagrams) இக்கருவி உருவாக்கித் தந்துவிடும்.
‘DiagramGPT’ மற்றும் ‘Diagram-as-Code’ தொழில்நுட்பம்
Eraser.io தளத்தில் உள்ள ‘DiagramGPT’ அம்சம், பயனர்கள் அளிக்கும் சாதாரண விளக்கங்களை உடனடியாக ஆர்க்கிடெக்சர் வரைபடங்களாக மாற்றித் தருகிறது. மேலும், இதில் உள்ள ‘Diagram-as-Code’ தொழில்நுட்பம் மூலம் குறியீடுகளைக் கொண்டே வரைபடங்களை உடனுக்குடன் மாற்றி அமைக்க முடியும். இது வரைபடக் கூறு களை நகர்த்திவைக்கும் நேரத்தைக் கணிசமாகக் குறைக்கிறது.
ஆவணமும் வரைபடமும் (Document & Canvas Integration)
வழக்கமான வெண்பலகைக் (Whiteboard) கருவிகளைப் போலப் படங்களை மட்டும் தராமல், ஒரே திரையில் இடதுபுறம் தொழில்நுட்பக் குறிப்புகளையும் (Markdown Documentation) வலதுபுறம் அதற்குரிய வரைபடத்தையும் (Interactive Canvas) வைத்து மேலாண்மை செய்யும் வசதியை இது வழங்குகிறது.
கிளவுட் கட்டமைப்பும் வரை படங்களும் (Cloud Architecture & ERD)
அதிகாரப்பூர்வக் குறியீடுகளையும் (Icons), தொடர்புகளையும் (Entity Relationship Diagrams - ERD) கொண்டு செயல்வழிப் படங்களைத் (Flowcharts) தரமாக உருவாக்க இத்தளம் வழி வகை செய்கிறது. நாம் வரைபடத்தில் புதிய கூறுகளைச் சேர்க்கும்போது, வடிவமைப்பில் சிதைவுகள் ஏற்படாமல் இருக்க ‘Auto-Layout’ தொழில்நுட்பம் உதவுகிறது.
நேரலை குழு பங்களிப்பு (Real-time Collaboration & GitHub Sync)
மென்பொருள் குழுக்கள் ஒரே நேரத்தில் ஒரே கேன்வாஸில் இணைந்து பணியாற்ற உதவும் நேரலை வசதியும் இதில் உள்ளது. ஹிட்ஹப் (GitHub Repository) போன்ற தளங்களுடன் தொழில்நுட்ப ஆவணங்களை நேரடியாக ஒன்றிணைக்க முடிவது இதன் கூடுதல் சிறப்பம்சம்.
எழுத்திலிருந்து ஆவண உருவாக்கம் (Text-to-Spec Generation)
வெறும் வரைபடங்களை மட்டும் உருவாக்குவதோடு நில்லாமல், சிக்கலான மென்பொருள் தேவைகளுக்கான முழுமையான தொழில்நுட்ப விவரக்குறிப்பு ஆவணங்களையும் (Technical Spec Docs) விரிவாக எழுதித்தரும் திறனும் இக்கருவிக்கு உண்டு.
பிற செய்யறிவுக் கருவிகளில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
பாரம்பரியமாகப் பயன்பாட்டில் இருக்கும் கருவிகளில் நாமே ஒவ்வொரு வடிவத்தையும் இணைப்புக்கோட்டையும் வரைந்து இணைக்க வேண்டும் என்பதால் வேலையை முடிக்க அதிக நேரமாகும். Eraser.io கருவியில் கட்டளைகளையும் குறியீடுகளையும் உள்ளீடு செய்வதன் மூலமாகவே வரைபடங்களை எளிதாகவும் விரைந்தும் வடிவமைக்க முடிகிறது.
யாருக்கு இது மிகவும் பயன்படும்?
மென்பொருள் பொறியாளர்கள் (Software Engineers), சிஸ்டம் ஆர்க்கிடெக்ட்டுகள், தொழில்நுட்பத் தலைவர்கள் (Tech Leads), தயாரிப்பு மேலாளர்கள் (Product Managers), கணினி அறிவியல் மாணவர்கள்.
தொழில்நுட்ப யோசனைகளை விரைவாக வரைபடங்களாக மாற்றி, ஆவணப்படுத்தும் பணியை எளிமைப்படுத்துவதில் Eraser.io கருவியின் பங்கு முக்கியமானது.
செய்யறிவு விதி: உங்கள் படைப்புகளில் செய்யறிவைப் பயன்படுத்தியிருந்தால் அதை நேர்மையோடு குறிப்பிடுங்கள். பணியிடங்களில் வெளிப்படைத் தன்மையைப் பேணுவது மிகவும் நல்லது. இது உங்கள்மீது நன்மதிப்பையும் நம்பிக்கையையும் உருவாக்கும்.
எடுத்துக்காட்டாக ஒரு கட்டளை: Generate an Entity Relationship Diagram (ERD) for a Healthcare Patient Management System. Define primary keys, foreign keys, and relationships between Patients, Doctors, Appointments, Prescriptions, and Billing tables.
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.