கணிதப்பாடம் சார்ந்த கடின மான வினாக்களுக்குத் தீர்வு காண்பது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பெரும் சவாலான செயல். வெறும் சூத்திரங்களை (Formulas) மனப்பாடம் செய்வதைவிட, ஒரு கணக்கு எவ்வாறு படிநிலையாகத் (Step-by-step) தீர்க்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது மிக அவசியம். இதற்கான தீர்வை வழங்கும் முன்னணி செய்யறிவுச் செயலிதான் - Photomath.
அதிநவீன கேமரா ஸ்கேனிங் (Smart Camera Scanner)
கூகுள் (Google) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் இச்செயலி, ஸ்மார்ட்போன் கேமரா மூலம் பாடப்புத்தகங்கள், அச்சிடப்பட்ட தாள்கள், கையெழுத்தில் (Handwritten Equations) உள்ள கணக்குகளை ஸ்கேன் செய்து உள்ளீடு செய்தாலே விளக்கங்களைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் OCR தொழில்நுட்பம் அதைத் துல்லியமாக அடையாளம் கண்டு, உடனடியாகத் தீர்வுகளை வழங்குகிறது.
விரிவான படிநிலை விளக்கங்கள் (Step-by-Step Explanations)
இறுதி விடையை மட்டும் தருவதோடு நின்றுவிடாமல், அந்த விடை எப்படிக் கிடைத்தது என்பதை இக்கருவி ஒவ்வொரு படியாகப் பிரித்து விளக்குகிறது. மேலும், ‘Animated Tutorials’ மூலம் காட்சிப்பூர்வமாக விளக்குவதால் மாணவர்கள் கணக்கின் பின்னணியில் உள்ள தர்க்கத்தையும் விதிகளையும் எளிதில் கற்றுக்கொள்ள முடிகிறது.
உயர்கணித ஆதரவு (Com prehensive Math Support)
அடிப்படை எண்கணிதம் தொடங்கி, இயற்கணிதம் (Algebra), முக்கோணவியல் (Trigonometry), நுண்கணிதம் (Calculus), புள்ளியியல் (Statistics), மேட்ரிஸ்கள் (Matrices), வகைக்கெழு சமன்பாடுகள் (Differential Equations) வரை பள்ளி, கல்லூரி அளவிலான அனைத்து உயர்கணிதச் சமன்பாடுகளுக்கும் இந்தச் செயலி துல்லியமான தீர்வுகளைத் தருகிறது.
பலவிதத் தீர்வு முறைகள் (Multiple Solving Methods)
கணக்குக்கு ஒரேயொரு வழியில் மட்டும் விடை தராமல், காரணிப்படுத்துதல் (Factoring), வரைபடம் (Graphing), சூத்திரங்கள் என வெவ்வேறு முறைகளில் தீர்வுகளைக் காட்டுகிறது. இது மாணவர்களின் பன்முகச் சிந்தனையையும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனையும் (Problem-solving skills) வளர்க்கிறது.
வரைபட உருவாக்கமும் அறிவியல் கால்குலேட்டரும் (Interactive Graphs & Scientific Calculator)
இருபடிச் சமன்பாடுகளுக்குத் தேவையான வரைபடங்களை இது வரைந்து காட்டுகிறது. மேலும், இதில் உள்ள அறிவியல் கால்குலேட்டர் மூலம் நேரடியாகக் கணக்குகளைத் தட்டச்சு செய்து பதில்பெற முடியும்.
ஆஃப்லைன் இயக்கமும் பாடநூல் தீர்வுகளும் (Offline Access & Textbook Solutions)
இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் (Offline) கணக்குகளைத் தீர்க்கும் வசதி இதிலுள்ளது. மேலும், புகழ்பெற்ற கணிதப் பாடநூல்களில் உள்ள ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கான தீர்வையும் (Textbook Solutions) இந்தச் செயலி தன்னுள் கொண்டுள்ளது.
பிற செய்யறிவுக் கருவிகளில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
Google Search போன்ற கருவிகள் இணையப் பக்கங்களின் தேடல் முடிவுகளையும் வீடியோக்களையும் மட்டுமே முதன்மையாகக் காட்டுகின்றன. ஆனால் Photomath செயலியோ கம்ப்யூட்டர் அல்ஜீப்ரா சிஸ்டம் (CAS) மூலம் கணிதச் சமன்பாடுகளைப் படிநிலைகளாக மாற்றிப் பயனருக்கு வழங்குகிறது.
யாருக்கு இது மிகவும் பயன்படும்?
பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவோர், பிள்ளைகளின் வீட்டுப்பாடத்தைச் சரிபார்க்க விரும்பும் பெற்றோர், கணித ஆசிரியர்கள். கணிதத்தின் மீதான பயத்தைப் போக்கி, மாணவர்கள் சுயமாகவே கணக்குகளைக் கற்றுத் தேர்ச்சி பெற வைப்பதில் Photomath முக்கியப் பங்காற்றுகிறது.
செயலியைத் தரவிறக்க: https://photomath.com/install/
செய்யறிவு விதி: எந்தவொரு கணக்காக இருந்தாலும் முதலில் நீங்களே அதைத் தீர்க்க முயலுங்கள். சுயமாகச் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொண்ட பின் அதைச் சரிபார்த்துக்கொள்ளவும் மேன்மேலும் உங்களை வளர்த்துக்கொள்ளவும் செய்யறிவின் உதவியை நாடுங்கள். சொந்த முயற்சியே உங்களை உண்மையான திறமைசாலியாக்கும்.
எடுத்துக்காட்டாக ஒரு கட்டளை: Plot the quadratic function $y = x^2 - 4x + 3$ and show vertex, axis of symmetry, and intercepts.
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.