ஒரு வேலையை லகுவாக்கும் எதுவும் கருவிதான். குண்டூசி முதல் விண்வெளியை நோட்டமிடும் தொலைநோக்கி வரைஅனைத்துமே கருவிகள்தான். கருவிகளுக்கும் நமக்குமான உறவு மனிதர்கள் நாகரிகமடைவதற்கு முன்பே தொடங்கிவிட்டது. மனிதர்கள் மட்டுமல்லாது பூச்சிகள், பறவைகள், விலங்குகளும்கூடக் கருவிகளின் துணையுடன் பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றன. நம்முடைய நெருங்கிய உறவுகளான குரங்குகள் தேன் எடுக்கவும், ஒன்றை மற்றொன்று தாக்கிக்கொள்ளவும் குச்சிகளைப் பயன்படுத்துகின்றன. அப்படித்தான் ஆதிமனிதனும் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்க வேண்டும்.
எந்த மனிதக்குழு கருவிகளைப் புதிதாக உருவாக்கியும், பழைய கருவிகளைத் தொடர்ச்சியாக மேம்படுத்தியும் பயன்படுத்துகிறதோ அதுவே உலகை ஆளும் வாய்ப்பைப் பெறுகிறது. வரலாறு முழுக்க இதற்கான ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன. எடுத்துக்காட்டுக்குக் கல்வியை எடுத்துக்கொள்வோம். கல்வி கற்றவர்களுக்கே காலங்காலமாகக் எண்ணற்ற வாய்ப்புகள் கிடைக்கின்றன. கல்வி கருவியாவது அங்கேதான்.
மெய்யுலகுக்கும் மெய்நிகர் உலகுக்குமான இடைவெளி குறைந்துகொண்டே வரும் இன்றைய சூழலில் இரண்டு உலகங்களும் ஒன்றோடு மற்றொன்று பின்னிப் பிணைந்து புதியதொரு வாழ்க்கைப் பரப்பை நம்முன் உருவாக்கியுள்ளன. ஆகவே கருவிகள் எந்த உலகுக்காக, நாட்டுக்காக, பயனாளர்களுக்காக உருவாக்கப்படுகின்றன என்று விவாதிப்பதைவிட, அவற்றைப் பயன்படுத்தும் முறைகளைக் கற்றறிந்து நம்முடைய வாழ்க்கையில் பயன்படுத்தலாம் என்பதைச் சிந்திப்பதே சரியான வழிமுறையாக இருக்கும்.
இன்று செய்யறிவுக் கருவிகள் (Ai Tools) நம்முடைய வாழ்க்கையின் அங்கமாக மாறிவருவதைக் காணமுடிகிறது. மெய்நிகர் உலகில் உருவாக்கப்படும் துறைசார்ந்த செய்யறிவுக் கருவிகள், அத்துறையில் பல்லாண்டுகளாகச் செயல்பட்டுவரும் நிபுணருக்கு இணையாகச் செயல்படும் வாய்ப்பை அனைவருக்கும் வழங்குகின்றன. ஆகவேதான் சமூகவியலாளர்கள், ‘செய்யறிவில் வெல்வோர், நாளைய உலகை வெல்வார்’ என்கிறார்கள்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான ஆதிக்கப் போட்டியில் செய்யறிவுக் கருவிகள் ஆயுதமாக மாறியிருப்பதைக் காணும்போது அக்கூற்று உண்மைதான் எனத் தோன்றுகிறது.
அமெரிக்க அதிபருக்கும் சீன அதிபருக்கும் இடையே கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, செய்யறிவுக்கருவிகள் குறித்து நீண்டநேரம் விவாதிக்கப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் பலவும் கூறுகின்றன. நாடுகளே இத்தகைய செய்யறிவுக் கருவிகளை உருவாக்கவும் பயன்படுத்தவும் பேரார்வம் காட்டுகின்றன எனும்போது தனிநபர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டியதிருக்கும் எனும் கேள்வி நமக்கு எழுவது இயற்கைதான்.
மனிதர்கள் மேற்கொள்ளும் லட்சக்கணக்கான தினசரி வேலைகளை எளிதாக்கும் செய்யறிவுக் கருவிகளை உருவாக்க பல பில்லியன் டாலர்களை அரசுகளும் நிறுவனங்களும் செலவிடுகின்றன. இவற்றில் பல கருவிகள் இலவசமாகக் கிடைக்கின்றன என்கிற உண்மை வெகு சிலருக்கே தெரிந்திருக்கிறது.
ஏற்கெனவே கணினித்துறை சார்ந்த அறிமுகமும் அனுபவமும் கொண்டோர் இக்கருவிகளைக் கற்று, குறுகிய காலத்தில் தங்கள் நிலையை எளிதாக உயர்த்திக்கொண்டிருப்பதையும் காணமுடிகிறது. அதேநேரம், அக்கருவிகளை அறியாதோர் அவர்களுடன் போட்டியிட இயலாத சூழலும் இன்று நிலவுகிறது. அது முறையல்ல. ஆபத்தில்லாத, பயன்தரும் கருவிகளைக் கற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்குமான உரிமை உலகில் உள்ள அனைவரும் உண்டு. சமவாய்ப்பு என நாம் கூறுவது அதைத்தான்.
எல்லாவற்றையும்விடச் செய்யறிவோ மெய்யறிவோ... அறிவு அனைவருக்குமானது அல்லவா! செய்யறிவுக் கருவிகளின் பயன்பாட்டை அனைவருக்குமானதாக மாற்றும் முயற்சியின் ஒருபகுதிதான் இக்கட்டுரைத் தொடர். நமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் செய்யறிவுக் கருவிகளைப் பற்றியும் அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் வரப்போகும் நாள்களில் பார்ப்போம்! செய்யறிவு உலகுக்கு உங்களை வரவேற்கிறேன்!
- மேலும் கற்கலாம்.
குற்றங்கள், நோய்கள் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளைச் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் முன்னறிவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆராய்ச்சியாளர். ஆய்வு நிறுவனம் ஒன்றின் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளதுடன் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழியாக்கமும் செய்துள்ளார். இலக்கியம், கல்வி, வரலாறு, சுற்றுச்சூழல், அரசியல், அறிவியல் புனை கதைகள் என இவரது படைப்புகள் பல இதழ்களிலும் வெளியாகியுள்ளன.