தம்பேர்: பயனர்களே போனின் பேட்டரியை மாற்றக்கூடிய வகையிலான போனை பின்லாந்து நாட்டை சேர்ந்த Jolla நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனை இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் ப்ரீ-ஆர்டர் செய்து பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-ல் தொடங்கப்பட்ட நிறுவனம் Jolla. நோக்கியா நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் இணைந்து இந்த முயற்சியை தொடங்கினர். சைல்பிஷ் இயங்குதளம், ஏஐ மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்நிறுவனம் வடிவமைத்து வருகிறது.
இந்தச் சூழலில் நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு ஸ்மார்ட்போனை இந்நிறுவனம் தற்போது வடிவமைத்துள்ளது. இந்த போன் அதன் சைல்பிஷ் ஓஎஸ் இயங்குதள போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் ஆண்ட்ராய்டு போனில் இயங்கும் செயலிகளை பயனர்கள் பயன்படுத்த முடியும்.
மேலும், பயனர்களே போனின் பேட்டரியை மாற்றக்கூடிய (Removable) வகையில் இந்த போன் வடிவைக்கப்பட்டுள்ளது. இது பழைய முறையில் பேட்டரியை கழட்டி மாட்டும் அனுபவத்தை பயனர்களுக்கு அளிக்கிறது. இப்போது சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான போன்கள் இன்-பில்ட் முறையில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த போனை ரூ.10,409 செலுத்தி பயனர்கள் ப்ரீ-ஆர்டர் செய்யலாம். முதல் பேட்சில் ஆர்டர் செய்தவர்களுக்கு இந்த போன் ரூ.52,465 என்ற விலையில் கிடைக்கும். இந்த போனின் சந்தை விலை ரூ.62,980 முதல் ரூ.73,495 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
‘Jolla போன்’ சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
6.36 இன்ச் AMOLED டிஸ்பிளே
மீடியாடெக் 5ஜி சிப்செட்
12ஜிபி ரேம்
256ஜிபி ஸ்டோரேஜ்
50 + 13 மெகாபிக்சல் கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
5,500 mAh பேட்டரி
சைல்பிஷ் இயங்குதளம்
5ஜி நெட்வொர்க்
ட்யூயல் நேனோ சிம்