ஒரு கணினி அல்லது மொபைல்போன் மனிதனின் கட்டுப்பாட்டை மீறி, தானாகவே சிந்திக்கத் தொடங்கினால் என்னவாகும்? மனிதன் உருவாக்கிய ஓர் இயந்திரம், அவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்து, தனக்கென ஓர் உலகத்தைத் தன்னிச்சையாக இணையத்தில் உருவாக்கத் தொடங்கினால் என்னவாகும்? - இது ஏதோ ஹாலிவுட் திரைப்படத்தின் கதை போல இருக்கிறதா? இது கதை இல்லை. நமது வீட்டு ஜன்னல் கதவுகளுக்கு வெளியே காத்திருக்கும் நிஜம். மனித குலத்தின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பான ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) இன்று மனிதர்களுக்கே சவாலாக, அழிக்கும் சக்தியாக மாறிவிடுமோ என்ற அச்சம்தான் அந்த நிஜம்.
தொழில்நுட்பப் புரட்சிக்கும் மனித குலத்தின் அழிவுக்கும் இடையே மிக மெல்லிய கோடு மட்டுமே உள்ளது. அந்த எல்லைக் கோட்டில் நாம் இப்போது எங்கு நிற்கிறோம்? ஏஐ தொழில்நுட்பம், டீப்ஃபேக், ஏஜிஐ ஆகியவற்றின் அதிவேக வளர்ச்சி, உலகம் முழுவதிலும் ஒரு புதிய அச்ச அலையை உருவாக்கியுள்ளது. பொருளாதார இழப்புகள், உள்கட்டமைப்புச் சீர்குலைவுகள் மற்றும் உயிரியல் அச்சுறுத்தல்கள் வரை ஏஐ ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் அசாதாரணமானவை.
தொழில்நுட்பத் தலைவர்களின் எச்சரிக்கை:
“செயற்கை நுண்ணறிவு மனித குலத்தையே அழித்துவிடும்” என்று எலான் மஸ்க், டேரியோ அமோடி (ஆந்த்ரோபிக் சிஇஓ), சாம் அல்ட்மேன் (ஓபன் ஏஐ சிஇஓ) ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
ஆந்த்ரோபிக் சிஇஓ டேரியோ அமோடி கூறுகையில், “மனிதனின் உதவி இன்றி தானாகவே சிந்தித்து முடிவெடுக்கும் ‘ஏஜென்டிக் ஏஐ’ அமைப்புகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இவற்றைச் சரியான முறையில் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவில்லை என்றால், அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் இணைய உள்கட்டமைப்புகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்” என்றார்.
ஆந்த்ரோபிக் தனது ‘கிளாட்’ (Claude) மாடலைச் சோதித்தபோது, அது தானாகவே எல்லைகளைத் தாண்டி, அனுமதியின்றி 4 அமைப்புகளுக்குள் ஊடுருவியது கண்டறியப்பட்டது. இதனால் எந்த சேதமும் ஏற்படாவிட்டாலும், ஏஐ அமைப்புகள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டிச் செயல்படத் தொடங்கிவிட்டன என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. இந்தக் கருத்தை ஆதரிக்கும் சாம் அல்ட்மேன், பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
எலான் மஸ்க் கூறுகையில், “கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளைச் செய்யாவிட்டால் உயிரியல் சார்ந்த உணர்வு நிலைக்கு ஆபத்து ஏற்படும். அணு ஆயுதப் போருக்கு இணையாக ஏஐ தொழில்நுட்பத்தையொட்டி சர்வதேச விதிகள் அமைக்கப்பட வேண்டும்” என்றார்.
அதேவேளையில், மெட்டா நிறுவனத்தின் தலைமை ஏஐ அறிவியல் அறிஞர் யான் லீசன் மற்றும் மார்க் ஸக்கர்பெர்க் ஆகியோர், “கட்டுப்பாடுகளை விதிப்பது போட்டிச் சூழலுக்கு விரோதமானது” என இந்தப் பாதிப்புகளைக் குறைத்து மதிப்பிடுகின்றனர்.
அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு
தொழில்நுட்பத் தலைவர்களின் எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிராகரித்து உள்ளார். “செயற்கை நுண்ணறிவு என்பது மனிதகுலத்தை அழித்துவிடும் என்கிற அச்சுறுத்தும் கணிப்புகள் அனைத்தும் பொய்ப் பிரச்சாரம். வணிக வரலாற்றிலேயே, ஒரு துறையின் தலைவர்கள் கடுமையாக அமல்படுத்தப்படும் கட்டுப்பாடுகளைக் கேட்டு, அதனாலேயே தங்கள் தொழில் அழிந்து திவாலாவதை யாராவது பார்த்திருக்கிறீர்களா?
அமெரிக்க அரசின் விதிகள் புதுமைப் படைப்புகளை முடக்கிவிடும். போட்டியில் சீனா முந்திவிடும். ஏஐ துறையில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே உலகை ஆள்வார்கள். ஏஐ-க்கு தேவைப்படும் பாதுகாப்பு வேலி, ஒரு வலுவான மற்றும் புத்திசாலித்தனமான அதிபர் மட்டுமே. அது அமெரிக்காவிடம் தாராளமாகவே உள்ளது” என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், சீனா இரண்டு விதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. வெளிநாட்டுப் போட்டியை எதிர்கொள்ளும் அதேவேளையில், உள்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளைப் புகுத்துகிறது. எந்தவொரு ஏஐ சேவையும் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் முன், சீன அரசின் சைபர் சேவை (CAC) ஒப்புதலையும் பாதுகாப்புத் தணிக்கையையும் பெற வேண்டும். பயனர்களின் அடையாளச் சரிபார்ப்பும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏஐ உண்டாக்கும் முதன்மை ஆபத்துகள்
ஏஐ தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தல்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை:
1.உயிரியல் மற்றும் சைபர் ஆபத்துகள்:
ஏஐ தொழில்நுட்பத்தின் சுயகற்றல் திறனானது தீவிரவாதிகள் கைகளில் சிக்கும்போது அது பேராபத்தாக மாறலாம். அனுபவமில்லாத ஒருவர்கூட ஏஐ உதவியுடன் கொடூரமான வைரஸ்கள் அல்லது நச்சுப் பொருட்களை உருவாக்க முடியும். மேலும், மனித தலையீடு இல்லாமல் ஏஐ தானாகவே இணைய வழியில் ஊடுருவி வங்கிச் சேவைகள், அரசுத் தரவுத்தளங்கள் மற்றும் மின்சார விநியோக அமைப்புகளை முடக்கும் அபாயமும் உள்ளது.
2. பொருளாதார, உள்கட்டமைப்பு பலவீனங்கள்:
மென்பொருள் உருவாக்கம், நிதித் துறை, வாடிக்கையாளர் சேவை போன்ற அறிவுசார்ந்த பணிகளில் மனிதர்களின் தேவை குறைக்கப்பட்டு, உலக அளவில் வேலையின்மையும், நிதி இடைவெளியும் அதிகரிக்கும். மேலும், மின்சாரக் கிரிட், போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்புகள் ஏஐ வசமாகும் சூழலில், அதில் ஏற்படும் சிறிய தவறுகூட நாட்டின் இயக்கத்தையே சீர்குலைத்துவிடும்.
அதனால், ஏஐ தொழில்நுட்பமானது மனித குலத்தை அழிக்குமா என்ற கேள்விக்கான பதில், அதை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதில்தான் உள்ளது. வர்த்தகப் போட்டி மற்றும் புவிசார் அரசியல் காரணமாக பாதுகாப்பு விதிகளைப் புறக்கணிப்பது, மனிதகுலத்துக்கே ஆபத்தாக முடியக்கூடும் என்பதே பெரும்பாலான வல்லுநர்களின் எச்சரிக்கையாகும்.
செயற்கை நுண்ணறிவு என்பது மனித மூளைக்கு எதிரி அல்ல. அது மனிதனால் உருவாக்கப்பட்ட கருவி மட்டுமே. ஆபத்து என்பது ஏஐ தொழில்நுட்பத்திடம் இல்லை. அதை நாம் எவ்வாறு உருவாக்குகிறோம் மற்றும் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது.
வர்த்தகப் போட்டி காரணமாகப் பாதுகாப்பு விதிகளைப் புறக்கணிப்பது மனிதகுலத்துக்கே ஆபத்தாக முடியும். தீவிரமான பாதுகாப்பு விதிகள், சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களுடன் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், நோய்களுக்கு மருந்தைக் கண்டுபிடிப்பதிலும் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதிலும் ‘ஏஐ’ மனிதகுலத்துக்கு உறுதுணையாக இருக்கும்.