செயற்கை நுண்ணறிவு (AI) நமது அன்றாட வேலைகளையும் தகவல்களைத் திரட்டும் முறையையும் மிகவும் எளிதாக்கியுள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், தகவல்களைப் பகுப்பாய்வு செய்து செயற்கை நுண்ணறிவு, நமக்குச் சுருக்கி அளிக்கும் விவரங்கள், மனித மூளையின் நினைவாற்றல் அமைப்பையே மாற்றியமைக்கும் திறன் கொண்டவை என்று புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இது வெறும் தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த விஷயம் மட்டுமல்ல. நமது சிந்தனைத் திறனுக்கும் சுயமாக யோசிக்கும் ஆற்றலுக்கும் விடுக்கப்பட்ட மிகப் பெரிய சவால்.
இன்றைய வேகமான உலகமயமாக்கல் சூழலில், நீண்ட கட்டுரைகளையோ அல்லது பல பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கைகளையோ முழுமையாகப் படிக்க மனிதர்களுக்கு நேரமில்லை. இதன் காரணமாக, சாட்ஜிபிடி (ChatGPT), கூகுள் ஜெமினி (Google Gemini) போன்ற AI கருவிகளிடம், ‘இதைச் சுருக்கமாகச் சொல்’ என்று கேட்கிறோம். அவையும் நொடிப் பொழுதில் தகவல்களைச் சுருக்கித் தருகின்றன.
செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் தகவல்களைச் சுருக்கித் தரும்போது இரண்டு முக்கியத் தவறுகளைச் செய்வதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்:
1. முக்கிய தகவல்களை விட்டுவிடுவது:
கட்டுரையின் மிக முக்கியமான விவரங்களை ஏஐ கருவிகள் விட்டுவிடுகின்றன. பல்வேறு கட்டளைகள் (prompts) மற்றும் மாதிரிகளை (models) வைத்து ஆய்வு செய்ததில், சுமார் 51.6% முக்கியமான தகவல்களை ஏஐ கருவிகள் சுருக்கத்தில் சேர்ப்பதில்லை என்று தெரியவந்துள்ளது.
2. தவறான தகவல்களை உருவாக்குவது:
இல்லாத ஒரு விஷயத்தை இருந்தது போலவோ அல்லது தவறான முறையிலோ சித்தரித்துச் சுருக்கமாக வழங்குகின்றன. மனிதர்களும் தொழில்நுட்பத்தின் மீதுள்ள நம்பிக்கையால், ஏஐ வழங்கியது உண்மை என நம்புகிறார்கள்.
மனித நினைவாற்றலைச் சிதைக்கும் ஏஐ மனித மூளை மிகவும் சுவாரசியமானது. அதேசமயம் எளிதில் ஏமாறக்கூடிய தன்மையும் கொண்டது. ஒரு நிகழ்வை நாம் நேரடியாகவே பார்த்திருந்தாலும், அதற்குப் பிறகு அந்த நிகழ்வைப் பற்றி ஏஐ சுருக்கி அளித்த தவறான தகவல்களைப் படிக்கும்போது நமது மூளை குழப்பமடைகிறது. இதனால், மனிதர்கள் நேரடியாகப் பார்த்த, அறிந்த உண்மையான விஷயங்களைக் கூட, ஏஐ அளித்த தகவல்களைப் படித்த பின் மறந்துவிடும் சூழல் ஏற்படுகிறது.
ஆய்வும் முடிவுகளும்
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 331 பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவுகள் இதனை உறுதிசெய்கின்றன.
அந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் ஜங்ஷன் பகுதியில் நடக்கும் ஒரு கார் விபத்து தொடர்பான அனிமேஷன் காணொளி காண்பிக்கப்பட்டது. 24 முதல் 48 மணிநேரத்திற்குப் பிறகு, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அந்தக் காணொளி தொடர்பான சுருக்கக் குறிப்பு அவர்களிடம் காண்பிக்கப்பட்டது. இதில் சிலருக்குத் துல்லியமான சுருக்கமும், சிலருக்குத் தவறான விவரங்கள் அடங்கிய சுருக்கமும் வழங்கப்பட்டன. பின்னர், அந்த நிகழ்வை நினைவுகூர்ந்து விபத்தில் தவறு யாருடையது என்று கூறுமாறு பங்கேற்பாளர்களிடம் கேட்கப்பட்டது. ஆய்வின் முடிவுகள்:
> துல்லியமான சுருக்கத்தைப் படித்தவர்களில் 83.6% பேர் உண்மையான நிகழ்வைச் சரியாக நினைவுகூர்ந்தனர்.
> ஆனால், தவறான விவரங்கள் கொண்ட ஏஐ சுருக்கத்தைப் படித்தவர்களில் 44.8% பேர் மட்டுமே உண்மையைச் சரியாக நினைவில் வைத்திருந்தனர்.
‘இது ஏஐ உருவாக்கிய சுருக்கம், இதில் தவறுகள் இருக்கலாம்’ என்று முன்கூட்டியே எச்சரித்து, பங்கேற்பாளர்களிடம் கொடுத்தபோதிலும், இந்தத் தவறான தாக்கம் குறையவில்லை.
ஏஐ தவறு செய்யும் என்று நமது அறிவுக்குத் தெரிந்திருந்தாலும், நமது ஆழ்மனது (Unconscious Mind) ஏஐ அளித்த தகவலையே உண்மையான நினைவாகப் பதிவு செய்துகொள்கிறது. தொழில்நுட்பத்தின் மீதான நமது அபார நம்பிக்கையும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
ஆய்வாளர்களின் எச்சரிக்கை :
இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் மத்தேயா சிம் கூறுகையில், “ஏஐ தொழில்நுட்பத்தின் தவறுகளை மனிதர்கள் தலையிட்டுச் சரிசெய்வார்கள் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு பதிலாக ஏஐ செய்யும் தவறுகளால் மனித நினைவாற்றலே சிதைக்கப்படலாம் என்று எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தெந்தத் துறைகளில் அபாயம்?
நீதிமன்றம் - குற்றவியல்:
ஒரு குற்றச் சம்பவத்தைக் கண்ட சாட்சியிடம், ஏஐ உருவாக்கிய சுருக்கப்பட்ட அறிக்கையைக் காண்பித்தால், அவர் தனது சொந்த நினைவை இழந்து தவறான வாக்குமூலம் அளிக்க வாய்ப்புள்ளது.
மருத்துவத் துறை:
நோயாளியின் மருத்துவ அறிக்கையை ஏஐ சுருக்கித் தரும்போது ஏற்படும் சிறிய தவறும் தவறான சிகிச்சைக்கு வழிவகுக்கும்.
செய்தி - அரசியல்:
சமூக ஊடகங்களில் உலா வரும் ஏஐ வழங்கி சுருக்கப்பட்ட தகவல்களும் செய்திகளும் மக்கள் மத்தியில் தவறான கருத்துகளையும் போலிச் செய்திகளையும் உண்மை என நம்ப வைத்துவிடும்.
செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் நமக்கு உதவ வந்த உதவியாளர்கள் மட்டுமே. அவை நமது மூளைக்கு மாற்றாக முடியாது. வேகத்தை விடத் துல்லியமே முக்கியம். எனவே, முக்கியமான முடிவுகள் எடுக்கும்போதும், ஆழமான விஷயங்களைக் கற்கும்போதும் ஏஐ அளித்த சுருக்கங்களை மட்டும் நம்பியிருக்காமல், மூல ஆதாரங்களை நாமே நேரடியாகப் படிப்பதே பாதுகாப்பானது. ஏஐ நம் நேரத்தைச் சேமிக்கலாம். ஆனால் நம் நினைவாற்றலைத் தீர்மானிக்க அதை அனுமதிக்கக் கூடாது.