வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் அடுத்த இருபது ஆண்டுகளில் வேலைவாய்ப்புச் சந்தையில் மிகப்பெரிய மாற்றங்களும் நெருக்கடிகளும் ஏற்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
இந்த இடைப்பட்ட மாற்றம் மனித வரலாற்றிலேயே மிகவும் சவாலான காலகட்டமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய பில் கேட்ஸ், தொலைபேசி வழி விற்பனை, வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் கணக்கு பராமரிப்பு உள்ளிட்ட அலுவலகம் சார்ந்த பணிகள் செயற்கை நுண்ணறிவால் முற்றிலும் கையகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
மனிதர்களை விட அதிவேகமாகவும், குறைந்த செலவிலும், துல்லியமாகவும் இந்தத் தொழில்நுட்பம் பணிகளை முடிப்பதால் நிறுவனங்கள் இதன் பயன்பாட்டை விரிவுபடுத்தும் எனக் குறிப்பிட்டார். மேலும், மனித வடிவிலான ரோபோக்கள் மூலம் கட்டுமானப் பணிகள், விவசாயம் மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட உடலுழைப்பு சார்ந்த பணிகளும் எதிர்காலத்தில் இயந்திரங்களால் மேற்கொள்ளப்படக் கூடும் என்றார்.
செயற்கை நுண்ணறிவின் மூலமாகப் பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்திச் செலவு பெருமளவு குறைந்து அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கும் சூழல் உருவாகினாலும், மனிதர்களின் வாழ்வாதாரத்தில் வேலைவாய்ப்பு என்பது வெறும் வருமானத்திற்காக மட்டுமின்றி ஒரு சமூக அடையாளமாகவும் நோக்க நோக்கமாகவும் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த சவால்களை எதிர்கொள்ள வேலை நேரங்களைக் குறைத்தல், ஆரம்பகால ஓய்வு பெற்றுக் கொள்ளுதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்றும், கலை, விளையாட்டு, சமையல் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு போன்ற துறைகளில் மனிதர்களின் பங்கேற்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
பில் கேட்ஸை போலவே எலான் மாஸ்க் மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தாரியோ அமோடே ஆகியோரும் செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புகளில் தற்காலிக சிக்கல்கள் எழும் என எச்சரித்துள்ளனர்.
அதேவேளையில், ஓபன்ஏஐ நிறுவனத் தலைவர் சாம் ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவால் தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அலுவலகப் பணிகள் பாதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.