சோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளனர். அதன் வளர்ச்சிக்கு அவர்கள் அதிகம் பாடுபடுகின்றனர்.
புதுச்சேரிக்கு, சோகா நிறுவனம் எப்படி நம்முடைய பங்கை அளிக்க முடியும். வேலை வாய்ப்புகளை கொடுக்க முடியும் என்று பார்க்கிறோம். சென்னை, மதுரையில் புதுச்சேரியில் இருந்து வரும் மாணவர்கள் எங்கள் நிறுவனத்தில் அதிகளவில் இருக்கின்றனர். அதனால் புதுச்சேரியிலேயே நிறுவனத்தை தொடங்க உள்ளோம். வரும் ஜனவரி, பிப்ரவரியில் இந்த பணியைப் தொடங்கி விடுவோம்.
இளையோரிடம் திறன் இருக்கிறதா என்பதைவிட அதனை உருவாக்க முடியுமா என்பதை சிந்திப்போம். முதலில் பயிற்சி மையத்தை அமைத்து அதிலிருந்து வேலை வாய்ப்பை கொடுத்து படிப்படியாக உயர்த்துவோம். புதுச்சேரியில் இடம், கட்டிடம் தேவைப்படுகிறது. அதனை அரசு கொடுப்பதாக கூறியுள்ளது. அதனால் உடனடியாக தொடங்கிவிடலாம். புதுச்சேரியில் ஆண்டுக்கு 4,500 பேர் பட்டதாரிகளாக உருவாகின்றனர். அதனால் முதலில் 200 பேர் வரை பணி வழங்க குறிக்கோள் உள்ளது.
ஏ.ஐ தொழில்நுட்பத்தில் நல்ல வாய்ப்புகளும், சவால்களும் இருக்கின்றன சாப்ட்வேரை மேம்படுத்தக்கூடிய நிலைக்கு ஏ.ஐ சென்று கொண்டிக்கிறது. 10 பேர் செய்யும் பணியை ஒருவர் செய்யும் நிலை தற்போது வந்துள்ளது. இதுவரை வேலைவாய்ப்புகளில் பெரிய தாக்கம் என்பது இல்லை.
பெங்களூரு, சென்னை ஐடி நிறுவனங்களில் புதிதாக பணிக்கு ஆட்கள் சேர்ப்பது என்பது குறைந்துள்ளது. வேலை வாய்ப்பு இல்லாமல் போகுமா என்பதை இன்றைக்கு கூற முடியாது. ஏ.ஐ தொழில் நுட்பத்தை கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கான பணியை சோகோ நிறுவனத்தில் செய்து வருகிறோம் என்றார்.