புது டெல்லி: ‘ஆதார் மித்ரா’ எனும் செயற்கை நுண்ணறிவு சேட்பாட் சேவையை குடியிருப்பவர்களின் பயன்பாட்டுக்காக இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (யுஐடிஏஐ) அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஆதார் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் என தெரிகிறது. இதில் ஆதார் பிவிசி ஸ்டேட்டஸ் (நிலை), புகார்களை பதிவு செய்தல் மற்றும் பின்தொடரவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த அனுபவத்தை குடியிருப்பவர்களுக்கு வழங்கும் நோக்கில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அரசு இந்திய மக்களின் பல்வேறு தரவுகளை யுஐடிஏஐ தளத்தில் சேகரித்து வைத்துள்ளது. இந்திய மக்கள் பல்வேறு பயன்பாடுகளை பெற ஆதார் அட்டை (எண்) முக்கியமான ஆவணமாக பயன்பட்டு வருகிறது.
மக்களின் குறை தீர்க்கும் பொறிமுறைகளில் ஒன்றாக இது இயங்கும் என தகவல். யுஐடிஏஐ தளத்தில் இந்த சேட்பாட் சேவையை பெற முடியும். இப்போதைக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இதனை பயனர்கள் பயன்படுத்த முடியும் என தெரிகிறது.
யுஐடிஏஐ தளத்தின் வலது பக்கத்தில் கீழ்புறம் இந்த பாட் இடம் பெற்றுள்ளது. அதை க்ளிக் செய்தால் பாட் ஓபன் ஆகிறது. அதில் பிவிசி ஸ்டேட்டஸ், ஆதார் நிலை, தவறவிட்ட ஆதார், இ-ஆதார் மற்றும் ஆதார் பதிவு மையம் குறித்த விவரங்கள், புகார் தெரிவிக்க போன்ற சேவைகளுக்கு இது பயன்படும் எனத் தெரிகிறது.