இணையத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு உண்டாகி, அதைச் செயல்படுத்தும் உறுதியும் இருந்தால் அதற்காகவென்றே ஒரு இணைய சேவை அறிமுகமாகி இருக்கிறது. டீசீட்.மீ (>deseat.me) எனும் அந்த இணையதளம் உங்களை நீங்களே இணையத்திலிருந்து டெலிட் செய்துகொள்ள உதவுகிறது.
இணையத்திலிருந்து வெளியேற வேண்டிய அவசியம் என்ன? அப்படியே வெளியேற நினைத்தாலும் அதை நாமே செய்துகொள்ளலாமே, இதற்காகத் தனியே ஒரு இணையதளம் தேவையா என நீங்கள் கேட்கலாம். ஆம், நீங்களே நினைத்தாலும் இணையத்திலிருந்து வெளியேறுவது என்பது அத்தனை எளிதல்ல. ஏனெனில் இணையத்தில் உங்கள் சுவடு எங்கெல்லாமோ பதிந்திருக்கலாம்.
ஏன் விடுபட வேண்டும்?
இணையத்தில் உலா வந்த காலத்தில் நீங்கள் எண்ணற்ற இணையதளங்களைப் பயன்படுத்தியிருப்பீர்கள். அவற்றில் சிலவற்றில் உறுப்பினர்களாகவும் பதிவு செய்துகொண்டிருப்பீர்கள். செய்திமடல் சேவைகளில் சந்தா செலுத்தியிருக்கலாம். இணைய வணிகத் தளங்களில் பதிவு செய்திருக்கலாம். ஒருமுறை பயன்படுத்திப் பார்ப்போமே என்று சில தளங்களில் உள்ளே நுழைந்து உறுப்பினராகியிருக்கலாம். இவற்றில் பல தளங்களை நீங்கள் மறந்து விட்டிருக்கலாம்.
இப்படி எந்தத் தளங்களிலெல்லாம் உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டோம் என்பதை நிச்சயமாக உங்களால் கணக்கு வைத்திருக்க முடியாது. இது அநேகமாக எல்லா இணையவாசிகளுக்கும் பொருந்தும். எனவே ஏதோதோ தளங்களில் உங்கள் பயனர் பெயரும், கடவுச்சொல்லும் பதிவாகியிருக்கும். அவற்றோடு நீங்கள் சமர்ப்பித்த விவரங்களும் இருக்கலாம். இவற்றில்லிருந்தெல்லாம் உங்கள் தடத்தை அழித்துக்கொண்டால் மட்டுமே இணையத்திலிருந்து உங்களால் முழுமையாக விடுவித்துக்கொள்ள முடியும்.
ஆக, இணைய விடுதலை தேவை எனில், பதிவு செய்துகொண்ட இணையதளங்களிலிருந்தெல்லாம் டெலிட் செய்து கொள்ள வேண்டும். இது கொஞ்சம் சிக்கலானது. அதனால்தான், இணையத்திலிருந்து தங்களை டெலிட் செய்ய விரும்புகிறவர்களுக்கு உதவுவதற்காக என்றே இந்த இணையதளம் அறிமுகமாகியுள்ளது. இது ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
விலகல் தேர்வு உங்களிடமே...
இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முதலில் பயனாளிகள் தங்கள் ஜிமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டைத் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு இந்தத் தளம் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தி, எந்தத் தளங்களிலெல்லாம் உறுப்பினராகச் சேர்ந்திருக்கிறோம் எனக் காண்பிக்கிறது. அதோடு அந்தத் தளங்களிலிருந்து டெலிட் செய்து கொள்வதற்கான இணைப்பையும் அளிக்கிறது. எந்தத் தளங்களில் இருந்தெல்லாம் நீங்கிக்கொள்வது என முடிவு செய்துகொள்ளலாம். அல்லது ஓட்டுமொத்தமாக எல்லாவற்றிலிருந்தும் விலகலாம்.
எல்லாம் சரி, இந்தத் தளத்திடம் இமெயில் முகவரியையும், பாஸ்வேர்டையும் சமர்பிப்பதால் அந்தரங்க மீறல் ஏற்படலாமே என்று சந்தேகிக்கலாம். “அத்தகைய சந்தேகம் தேவையில்லை. பயனாளிகள் வெளியேற வேண்டிய தளங்கள் பற்றிய விவரம் மட்டுமே எங்களிடம் அளிக்கப்படுகிறது. நீக்கம் தொடர்பான அனைத்துச் செயல்களும் பயனாளிகள் கணிணியிலேயே நிகழ்வதால் கவலைப்பட வேண்டாம்” என்கின்றனர் இந்தத் தளத்தை உருவாக்கிய மென்பொருளாளர்கள் வில்லே டால்போ மற்றும் லினஸ் உன்னேபேக் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
விலக முடியுமா..?
ஆனால், இந்தச் சேவை மூலம்கூட இணையத்திலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டதாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் இது ஜிமெயில் கணக்கு அடிப்படையில் செயல்படுவதால், அதனுடன் தொடர்பு கொண்டிருக்கும் தளங்களிலிருந்து மட்டுமே நீக்கிக் கொள்ள முடியும். ஜிமெயிலுக்கு முந்தைய இமெயில் முகவரி (ஹாட்மெயிலை நினைவில் உள்ளதா?) அல்லது வேறு முகவரிகளில் பதிவு செய்துகொண்ட சேவைகளை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு காலத்தில் சமூக வலைப்பின்னல் பரப்பில் கோலோச்சிய ‘மைஸ்பேஸ்’ போன்ற தளங்களில் இது செல்லுபடியாகாது.
இருந்தாலும் இது சுவாரசியமான சேவைதான். எனவே இணைய யுகத்தில் இணையத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் விஷயம் என்னவென்றால், அப்படியே விரும்பினாலும்கூட அது முற்றிலும் சாத்தியமில்லை. பதிவு செய்து கொண்ட தளங்களில் இருந்தெல்லாம் நீக்கிக்கொண்டால்கூட, சமூக ஊடகங்களில் நண்பர்கள் நம்மைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இருக்கலாம். அவர்கள் டேக் செய்த படங்கள் இருக்கலாம்.
ஆக, இணையத்திலிருந்து நீக்கிக் கொள்வது அத்தனை எளிதல்ல. எப்படியும் இணையம் ஏதேனும் ஒரு வழியில் நினைவில் வைத்திருக்கும். இதை ஏற்றுக்கொள்வது ஒரு விழிப்புணர்வாகவே அமையும். இணையத்தில் நம்முடைய சுவடுகள் பதிந்துகொண்டே இருப்பதால், நாம் அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. அது மட்டும் அல்ல எந்த இணையதளங்களில் எல்லாம் பதிவு செய்துகொண்டோம் என நினைத்துப் பார்ப்பதேகூட நல்ல இணையப் பயிற்சியாக இருக்கும். நமது இணையப் பழக்கத்தை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்!