படம்: ட்ரூகாலர் 
தொழில்நுட்பம்

இந்தியாவில் அரசின் டைரக்டரியை டிஜிட்டலில் அறிமுகம் செய்த ட்ரூகாலர்

செய்திப்பிரிவு

செல்போன் பயனர்களிடம் வங்கி அல்லது அரசு நிறுவன அதிகாரி போல தொலைபேசி அழைப்புகளின் வழியே பேசி, சம்பந்தப்பட்ட பயனர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நொடிகளில் தட்டி தூக்கி விடுவார்கள் மோசடி நபர்கள். இது தொடர்பாக அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் நாள்தோறும் இது அரங்கேறிய வண்ணம் உள்ளது.

இந்த சூழலில் இந்திய அரசின் டிஜிட்டல் டைரக்டரியை ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது ட்ரூகாலர் செயலி.

இதன் மூலம் இந்த செயலியின் பயனர்கள் எளிய முறையில் அரசு அலுவலகம் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது. அதே போல அரசு அதிகாரிகள் என சொல்லி பேசுபவர்கள் போலியானவர்களா அல்லது அசலான அதிகாரி தானா என்பதையும் அறிந்து கொள்ள முடியுமாம்.

அதாவது ஒரு போனுக்கு அழைப்பு வரும் போதோ அல்லது மேற்கொள்ளும் போதோ ட்ரூகாலர் செயலியின் காலர் ஐடி பச்சை நிற பேக்கிரவுண்ட் மற்றும் நீல நிற டிக் ஒன்றும் இருக்குமாம். இந்த ஹைலைட் அதிகாரப்பூர்வ அரசு எண்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிளாக் பதிவில் ட்ரூகாலர் பகிர்ந்துள்ளது.

சுமார் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த சேவை இப்போதைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 240 மில்லியன் பயனர்களை ட்ரூகாலர் செயலி கொண்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள தரவுகள் அனைத்தும் கிராவுட் அடிப்படையிலானவை. இந்நிறுவனம் ஸ்வீடனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

மாநில மற்றும் மத்திய அரசு சேவைகள், தூதரகங்கள், காவல் துறை, அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொது உதவி எண்கள் இதில் கிடைக்கும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT