மசாஜ் செய்ய, ஒத்தடம் கொடுக்க ஏற்றது இந்த சிறிய குடுவை. தேவைக்கேற்ப சுடுநீரையோ, ஐஸ் கட்டிகளையோ கொட்டி பயன்படுத்திக் கொள்ளலாம். உருளை வடிவில் உள்ளதால் உடற்பயிற்சிக்கும் ஏற்றது.
சுருளும் குடுவை
பயணங்களிலோ, வெளியிடங்களிலோ டீ, காபி குடிக்க பயன்படுத்தப்படும் `யூஸ் அண்ட் த்ரோ’ கப்களுக்கு மாற்றாக வந்துள்ளது இந்த போகிடோ கிளாஸ். பானங்களை குடித்து முடித்ததும் சுருட்டி பையில் வைத்துக் கொள்ளலாம்.
ஆயுத பேனா
அவசர கால ஆயுதமாகவும் இந்த பேனாவைப் பயன்படுத்தலாம். உறுதியான மூலப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு முனையில் பேனா, மற்றொரு முனையில் குத்தி உடைக்கும் கூர்முனையும் மடக்கும் கத்தியும் உள்ளது.
சொகுசு கூண்டு வீடு
அன்றாட தேவைகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டிய நகரங்களில் உலக அளவில் ஹாங்காங் முக்கிய இடத்தில் உள்ளது. வீட்டு வாடகை அதிகம் என்பதால் இங்கு பலரும் சேர்ந்து ஒரே வீட்டை பகிர்ந்து கொள்வார்கள். அதுபோல இங்குள்ள கூண்டு வீடுகளும் உலக அளவில் பிரபலமானது. தற்போது சொகுசு கூண்டு வீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஜப்பானின் கேப்ஸ்யூல் ஓட்டலைப்போல இருந்தாலும், இந்த கூண்டு வீடுகளில் உள்ளவர்களுக்கு பொதுவான குளியலறை, சமையலறை, சலவை இயந்திரம் போன்ற வசதிகளும் உண்டு.
சீனாவின் ஆதார்
சீனாவின் கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள சுற்றுலா நகரமான ஹூஸென் நகரத்தை டிஜிட்டல் மயமாக்கியுள்ளனர். இந்த நகருக்கு சுற்றுலா வரும் பயணிகள் அடையாள அட்டை ஏதும் எடுத்து வர தேவையில்லை. இங்குள்ள பயணிகள் அலுவலகத்தில் உள்ள கணினி திரையில் செல்பி எடுத்துக் கொண்டால் போதும். ஆதார் போல பயோமெட்ரிக் முறையில், 99.77% சரியான தகவல்கள் சுற்றுலா துறைக்கு கிடைத்து விடுகிறது. பைடு (Baidu) தொழில்நுட்ப நிறுவனம் இதற்கான மென்பொருளை உருவாக்கியுள்ளது.