தொழில்நுட்பம்

ஆவலை வீசுவோம் 29: நீங்களும் தேடப்படுகிறீர்கள்!

சைபர் சிம்மன்

தனிநபர்கள் தொடர்பான தகவல்கள், சமூக ஊடக பரப்பு தகவல்கள், இ-மெயில் முகவரிகள் தேடலுக்கு உதவும் சிறப்புத் தேடியந்திரங்கள் இருக்கின்றன.

இணையத்தில் குறிப்பிட்ட நோக்கிலான சிறப்பு தேடியந்திர வகைகளில் மக்கள் தேடியந்திரங்கள் தனித்து நிற்கின்றன. இந்தப் பிரிவிலேயே பலவகையான தேடியந்திரங்கள் இருப்பதையும் பார்க்கலாம். மேலோட்டமாக பார்க்கும்போது இந்த தேடியந்திரங்கள் சுவாரஸ்யமானவை. ஆனால், உண்மையில் இவை கொஞ்சம் அச்சமூட்டுபவையும் கூட. ஏனெனில் இவை நீங்களும் இணையத்தில் தேடப்படலாம் என்பதை உணர்த்துகின்றன. ஏன் இப்போது கூட நீங்கள் தேடப்பட்டுக்கொண்டிருக்கலாம். உங்கள் பழைய நண்பரோ அல்லது உங்களை தொழில்முறையாக நாட விரும்பும் யாரோ ஒருவர் உங்களைப் பற்றிய தகவல்களை தேடிக்கொண்டிருக்கலாம். அது போட்டியாளராக கூட இருக்கலாம். இன்னும் யார் யாராகவோ கூட இருக்கலாம். அவர்களின் நோக்கமும் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

விஷயம் என்னவென்றால், இணையத்தில் நாம் தகவல்களை மட்டும் தேடுவதில்லை; எல்லாவற்றையும் தேடிக்கொண்டிருக்கிறோம். தனிநபர்கள் தொடர்பான தகவல்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம். அதாவது, நாம் அறிந்த நபர்கள் அல்லது அறிய விரும்பும் நபர்கள் தொடர்பான தகவல்களை இணையத்திலேயே தேட முற்படுகிறோம். இந்த வகையான தேடலுக்கு உதவுவதற்காக என்றே உருவாக்கப்பட்ட தேடியந்திரங்களும் அநேகம் இருக்கின்றன. இவை மக்கள் தேடியந்திரங்கள் என குறிப்பிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் பியூப்பிள் சர்ச் இஞ்சின்ஸ்!

நண்பர்களைத் தேட!

இந்த வகை தேடியந்திரங்கள் குறிப்பிட்ட பெயர்கள் தொடர்பான தகவல்களை தேடித்தருகின்றன. உங்கள் பழைய நண்பர் ஒருவரை தொடர்பு கொள்ள விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் தொடர்பில் உள்ள வேறு பழைய நண்பர்களிடம் விசாரித்துப் பார்ப்பீர்கள். இது பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய உத்தி. இப்போது, உடனே இணையத்தில் அந்த நண்பரது பெயரை டைப் செய்து பார்ப்பீர்கள். கூகுளில் தேடும்போது, அதே பெயர் கொண்ட நபர்களின் இணைய பக்கம், சமூக ஊடக கணக்குகள் தொடர்பான தகவல்கள் வந்து நிற்கும். இவற்றுக்கு மத்தியில் நீங்கள் தேடும் நபர் பற்றிய தகவல்களும் இருக்கலாம். ஆனால் தொடர்பில்லாத வேறு முடிவுகளும் வந்து நிற்கும்.

இதற்கு மாறாக, நபர்கள் தொடர்பான தகவல்களை மட்டுமே தேடித்தருவதற்காக என்றே தனித்தேடியந்திரங்கள் உருவாகி இருக்கின்றன. தேடப்படும் நபரின் முகவரி, சமூக ஊடக இருப்பு உள்ளிட்ட தகவல்களை இவை பட்டியலிடுகின்றன. இவை முழுவதும் துல்லியமானவை என்று சொல்வதற்கில்லை ஆனால், பெயர்கள் சார்ந்த விவரங்களை மட்டுமே முன்வைக்கின்றன.

பொதுவெளியில் தகவல்கள்!

பொதுவாக இவை, இணையத்தில் கிடைக்கும் விவரங்கள், சமூக ஊடக கணக்குகளில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள், வலைப்பதிவுகளில் உள்ள விவரங்கள் என பல இடங்களில் இருந்து தகவல்களை திரட்டித் தருகின்றன. எல்லாமே பொதுவெளியில் இருப்பவைதான். இவற்றோடு பொது பயன்பாட்டிற்கான பல்வேறு தகவல் திரட்டுகளில் இருந்தும் தேடித்தருகின்றன.

சமூக ஊடக தகவல்கள் எனும்போது பரவலாக எல்லோரும் அறிந்த ஃபேஸ்புக், ட்விட்டரில் துவங்கி அதிகம் அறியப்படாத சேவைகளிலும் அதேபெயரில் கணக்கு இருக்கிறதா என தேடிப் பார்த்து தருகின்றன. யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக சேவைகளிலும் தேடுகின்றன. எனவே, இவற்றை பயன்படுத்தும்போது நாம் தேடும் பெயர் தொடர்பான தகவல்களை பெற கூடுதல் வாய்ப்பு இருக்கிறது.

மக்கள் தேடியந்திரங்களில் அதிகம் அறியப்பட்டவை:

பிஐபிஎல் >https://pipl.com

ஸ்போக் >http://www.spock.com

ஸ்போகியோ >http://www.spokeo.com

யாஸ்னி >http://www.yasni.com

பிஐபிஎல் தளத்தில் குறிப்பிட்ட நபரின் பெயர் தவிர பயனர் பெயர், இ-மெயில் முகவரி அல்லது தொலைபேசி எண் கொண்டு தேடலாம். இருப்பிடத்தையும் குறிப்பிட்டு தேடும் வசதி இருக்கிறது.

ஸ்போகியோ தளம் 61-க்கும் அதிகமான சமூக ஊடக சேவைகளில் இருந்து தகவல்களை தேடித்தருகின்றது. மேலும் இணையதளங்களில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், வலைப்பதிவுகள் உள்ளிட்டவற்றில் இருந்தும் தகவல்களை தேடித்தருகிறது.

ஸ்போக் தளம் அமெரிக்கா சார்ந்ததாக இருக்கிறது. யாஸ்னி தேடியந்திரமும், சமூக ஊடக தளங்கள் மற்றும் தரவுகள் பட்டியலில் இருந்து பெயர்கள் தொடர்பான தகவல்களை அளிக்கிறது. இதில் பெயரை குறிப்பிட்டு தேடுவதோடு, குறிப்பிட்ட தொழில்முறை அடையாளம் குறித்தும் தேடலாம். அதிகம் தேடப்பட்ட பெயர்களை அடையாளம் காட்டுவது உள்ளிட்ட பல கூடுதல் அம்சங்களை அளிக்கிறது.

இவை தவிர மேலும் பல மக்கள் தேடியந்திரங்கள் இருக்கின்றன. ஸ்கிபீஸ் (http://www.skipease.com/) பல மக்கள் தேடியந்திரங்களின் தேடலை ஒரே இடத்தில் பயன்படுத்திக்கொள்ளும் வசதியை அளிக்கிறது.

கட்டணச் சேவை

இந்தத் தேடியந்திரங்களில் சில கூடுதல் தகவகள் அல்லது இன்னும் துல்லியமான தேடல் தேவை எனில் கட்டண சேவை வழங்குகின்றன. மேலும், நீங்கள் தேடும் பெயர்கள் தொடர்பான தகவல்களை கண்காணித்து இ-மெயில் மூலம் எச்சரிக்கும் சேவைகளையும் வழங்குகின்றன. இவை பெரும்பாலும் வர்த்தக நோக்கில் வழங்கப்படுபவை. பிராண்ட்கள் போன்றவை தொடர்பான இணைய உரையாடலை கண்காணிக்க இவை உதவலாம். போட்டியாளர்களை பின் தொடரவும் இவை உதவலாம்.

ஆனால், இவை பெரும்பாலும் பொதுவெளியில் உள்ள தகவல்களையே திரட்டித் தருவதால், வேறு எங்கும் கிடைக்காத பிரத்யேக தகவல்களை எப்படி அளிக்கின்றன என்பது சரியாக புரியாத விஷயம்.

இவை எந்த அளவு பயனுள்ளவை என்பது ஒருபுறம் இருந்தாலும் தனிநபர்கள் தொடர்பான தகவல்களை தேடித் தருவதற்காக என்றே தேடியந்திரங்கள் இருக்கின்றன என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதிலும் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும், இணையத்தை பயன்படுத்தும் விதம் விரிவடைந்து வரும் நிலையில், தனிநபர்கள் தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடும் தேவையும் அதிகரித்திருக்கிறது என்பதை இவை உணர்த்துகின்றன.

நாமும் இத்தகைய சேவையை பயன்படுத்தலாம் என்பது போல, நம்மைத் தேடவும் பலர் இந்த சேவைகளை பயன்படுத்தலாம். அப்படி இணையத்தில் தேடப்படும் போது எந்த வகையான தகவல்கள் வந்து நிற்கின்றன என்பது நமக்குத் தெரியாது. ஒருவர் பெயருடன் பட்டியலிடப்படும் விவரங்கள் அவருடையது தானா என்பதும் தெரியாது. இவை எல்லாம் பெயர் தேடலை சிக்கல் மிக்கதாக ஆக்குகின்றன.

விங்க் (>http://itools.com/tool/wink-people-search ), பீக்யூ (>http://www.peekyou.com/ ) போன்றவையும் இந்த வரிசையில் வருகின்றன.

சமூக தேடியந்திரங்கள்

மக்கள் தேடியந்திரங்கள் தவிர சமூக தேடியந்திரங்களும் இருக்கின்றன. இவை சமூக ஊடக பரப்பிலான தகவல்களை தேட வழி செய்கின்றன.

பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகள் பிரபலமானபோது இந்த வகை தேடியந்திரங்களும் உருவாகத் துவங்கின. சமூக ஊடகங்களில் தகவல்களும் கருத்துக்களும் அதிகம் பகிர்ந்து கொள்ளப்படும் நிலையில் அவற்றை உடனடியாக தேடித் தரும் பிரத்யேக தேடியந்திரங்கள் தேவை எனும் அடிப்படையில் இவை செயல்பட்டன.

இந்த வகை தேடியந்திரங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களில் பகிரப்படும் தகவல்களை மட்டுமே தேடித்தருகின்றன. ஒரு கட்டத்தில் சமூக தேடியந்திரங்கள் பல தோன்றினாலும் பெரும்பாலானவை காணமால் போய்விட்டன. சோஷியல்மென்ஷன் (>http://www.socialmention.com). சோஷியல்சர்ச்சர் (>https://www.social-searcher.com/), ஸ்மேஷ்பியூஸ் (>http://smashfuse.com/), சோஷியல் சீக்கிங் (>http://socialseeking.com/) உள்ளிட்ட தேடியந்திரங்கள் இன்னமும் இந்த பரப்பில் இயங்கி கொண்டிருக்கின்றன.

மற்ற தேடியந்திரம் போலவே இவற்றிலும் குறிச்சொல்லை டைப் செய்து தேடலாம். அந்தக் குறிச்சொல் தொடர்பான சமூக ஊடக பகிர்வுகள் பட்டியலிடப்படும். தனிநபர்களும் இவற்றை பயன்படுத்தலாம். நிறுவனங்கள் மற்றும் பிராண்ட்கள் தங்களைப்பற்றிய சமூக ஊடக பரப்பில் என்ன பேசிக்கொள்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளவும் இவற்றை பயன்படுத்தலாம். இந்த வசதி சில தேடியந்திரங்களால் கட்டண சேவையாகவும் அளிக்கப்படுகிறது.

இ-மெயில் தேடல்!

இவைத் தவிர ஒருவருடைய இ-மெயில் முகவரிகளை தேடித்தருவதற்கான தேடல் தளங்களும் பல இருக்கின்றன. ஒரு நிறுவனம் அல்லது ஒருவருடையை பெயரை சமர்பித்தால் அது தொடர்பான இமெயில் முகவரிகளை தேடித்தரும் தளங்கள் இருக்கின்றன. உதாரணம்: இ-மெயில் ஹண்டர் (https://hunter.io/). இதேபோல, ஒரு இ-மெயில் முகவரியை சமர்பித்தால் அதன் பின்னே உள்ள நபரை தெரிந்துகொள்ள உதவும் தளங்களும் இருக்கின்றன. இது தலைகீழ் மெயில் தேடல் என குறிப்பிடப்படுகிறது. நபர்கள் தொடர்பாக தகவல்களை தேட உதவும் தேடியந்திரங்களில் சில இந்த வசதிகளையும் அளிக்கின்றன. உதாரணம்: தட்ஸ்தெம் (https://thatsthem.com/reverse-email-lookup).

இ-மெயில் முகவரிகளை தேட உதவும் சேவைகள் எந்த அளவு துல்லியமானவை என்று தெரியவில்லை. ஆனால், இது மிகப்பெரிய அளவில் தேவை இருக்கும் துறையாக இருப்பதை அறிய முடிகிறது. பல தளங்கள் இந்தப் பிரிவில் செயல்பட்டு வருகின்றன. இணையத்தில் தகவல்களோடு மனிதர்களும் தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதை இவை உணர்த்துகின்றன.

- சைபர்சிம்மன், தொழில்நுட்ப எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

SCROLL FOR NEXT