ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் எலான் மஸ்க் 
தொழில்நுட்பம்

ட்விட்டரில் எலான் மஸ்கிற்கு துணைபுரியும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் | யார் இவர்?

செய்திப்பிரிவு

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும், டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதோடு ட்விட்டர் தளத்திலும், நிர்வாக அளவிலும் பல்வேறு மாற்றங்களை அவர் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவருமே அது குறித்து ட்வீட் மூலம் புதிர் போட்டு வருகிறார். இந்தச் சூழலில் ட்விட்டரில் மஸ்கிற்கு உதவி வருகிறார் சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன். யார் இவர் என்பதை பார்ப்போம்.

மஸ்கிற்கு தான் உதவி வருவதை ஸ்ரீராம் ட்வீட் மூலம் உறுதி செய்துள்ளார். முன்னதாக, ட்விட்டரை வாங்கிய கையோடு அதன் சிஇஓ பராக் அகர்வால் உட்பட முக்கிய நிர்வாகிகளை மஸ்க் பணி நீக்கம் செய்திருந்தார். இந்நிலையில்தான் மஸ்கிற்கு, ஸ்ரீராம் உதவி வருகிறார்.

“ட்விட்டர் நிறுவனத்தில் தற்காலிகமாக எலான் மஸ்கிற்கு உதவி வருகிறேன். என்னோடு இணைந்து வேறு சிலரும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது மிகவும் முக்கியமான நிறுவனம். உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதும் கூட. மஸ்க், அதை சாத்தியம் செய்வார் என்றும் நம்புகிறேன்” என ஸ்ரீராம் ட்வீட் செய்துள்ளார்.

யார் இவர்? - ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்து, வளர்ந்த இந்தியர். தமிழகத்தின் தலைநகரில்தான் பட்டம் முடித்துள்ளார். ஆண்ட்ரசன் ஹாரோவிட்ஸ் (a16z) நிறுவனத்தில் பொது பங்குதாரராக இப்போது உள்ளார். கிரிப்டோ மற்றும் வெப் ஸ்டார்ட்அப் முதலீடு சார்ந்து இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், ஸ்னாப் சாட், ட்விட்டர் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்வேறு விதமான முக்கிய பொறுப்புகளையும், பணிகளையும் கவனித்த அனுபவம் கொண்டவர். கிரிப்டோகரன்சி குறித்து தனது யூடியூப் சேனலில் தான் அறிந்ததை பகிர்வார். மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி உடன் இணைந்து பாட்காஸ்ட்களையும் ஹோஸ்ட் செய்து வருகிறார். மஸ்கிற்கு உதவிக்கொண்டே a16z நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார். தற்போது சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார்.

SCROLL FOR NEXT