பெங்களூரு: இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்துக்காக 36 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியில் இஸ்ரோ தனது ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது. ஒன்வெப் நிறுவனத்துக்காக மேலும் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட்டில் அனுப்ப நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கான பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி எம்3 ராக்கெட்டை இஸ்ரோ தற்போது சுருக்கமாக எல்விஎம்3 என அழைக்கிறது. இந்த ராக்கெட்டில் மேல் அடுக்கில் பொருத்தப்படும் கிரையோஜெனிக் பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த சிஇ-20 இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின் மகேந்திரகிரியில் உள்ள சோதனை மையத்தில் நேற்று முன்தினம் 25 வினாடிகள் இயக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
தேவைக்கு தகுந்தபடி இன்ஜினை ட்யூன் செய்வதுதான் இந்த பரிசோதனையின் முக்கிய நோக்கம். அனைத்து செயல்பாடுகளும் திருப்திகரமாக இருந்ததாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.