லக்னோ: நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் ‘ஏகே-203’ ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் பணி தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்தியா மற்றும் ரஷ்ய நாட்டு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த பணியை மேற்கொள்ள உள்ளன. இதனை ரஷ்ய தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி முகாமையான பிடிஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2019 வாக்கில் தொடங்கப்பட்ட இந்த தனியார் லிமிடெட் நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் இதற்கான உற்பத்தி கூடத்தை நிறுவியுள்ளது. இந்த கூடத்தில் தான் ‘ஏகே-203’ ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ரஷ்யாவின் பிரபலமான துப்பாக்கிகளை 100 சதவீதம் உள்ளூர்மயமாக்கலின் கீழ் இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என விரும்புகிறோம். வரும் நாட்களில் நவீன ரக துப்பாக்கிகள் இங்கிருந்து தயாரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன” என ரோசோபோரோனெக்ஸ்போர்ட் நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் அலெக்சாண்டர் மிகீவ் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனம் இன்று குஜராத் மாநிலம் காந்தி நகரில் தொடங்கும் ராணுவ தளவாட கண்காட்சியில் பங்கேற்கும் என தெரிகிறது. இந்திய பாதுகாப்பு படையில் ரஷ்ய நாட்டு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஏகே-203 ரக துப்பாக்கிகள் அனைத்து விதமான சூழலிலும் சுலபமாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.